இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு பயிற்சி வழங்க இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் களத்தடுப்பு பயிற்சியாளரான R.சிறிதர் இலங்கை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 10 நாட்கள் கொண்ட களத்தடுப்பு நிகழ்ச்சித்திட்டம் ஒன்றில் பங்கேற்கும் R. சிறிதர் இலங்கையின் தேசிய ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகள் முதல்தர கழக அணிகள் மற்றும் 19 வயதின் கீழ் அணி வீரர்கள் என பல்வேறு தரப்பினருக்காக தனது அனுபவத்தினை பகிரவிருக்கின்றார்.
தேசிய கிரிக்கெட் வீராங்கனைளுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்வானது நாளை (7) தொடக்கம் ஆரம்பமாகுவதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிலை – 3 (Level 3) பயிற்சியாளரான சிறிதர் 2014 தொடக்கம் 2021 வரையிலான காலப்பகுதியில் இந்திய அணி பங்கேற்ற சுமார் 300 இற்கும் மேற்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பயிற்சியாளராக கடமை புரிந்திருப்பது சுட்டிக்காட்டத்தக்கது.
அதேநேரம் தான் இலங்கையில் பயிற்சி வழங்குகின்ற 10 நாட்கள் கொண்ட காலப்பகுதியில் சிறிதர், இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களுடனும் இணைந்து செயற்படுவார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
