இலங்கைவாழ் தமிழர் நலன் விரும்பிகள் (WTSL) அமைப்பு, இலங்கையின் அனைத்து மாகாண சபைகளும் வினைத்திறனுடன் செயற்படுவதன் தேவையையும், குறிப்பாக 13வது திருத்தத்தை (13A) முழுமையாகவும் முறையாகவும் செயல்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வேண்டிய அத்திவார அடித்தள கட்டமைப்பை வழங்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
தற்போது, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் அதன் மாகாண அமைச்சர் மற்றும் முக்கிய கட்சி உறுப்பினர்கள் மூலம் இது விடயத்தில் எல்லை நிர்ணய விவாதங்களைத் தொடங்கியுள்ளது. மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான இறுதி முடிவு NPP-யிடம் உள்ளது. அது தற்போது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. அத்தகைய ஆணையுடன் தேர்தல்களை நடத்துவதற்கு மட்டுமல்லாமல், விரும்பினால், மாகாண சபை முறையை முற்றிலுமாக ஒழிப்பதற்கும் அரசாங்கத்திற்கு அரசியலமைப்பு அதிகாரம் உள்ளது.
இந்நிலையில், தமிழ் சமூகத்திற்குள்ளும், தமிழ் அரசியல் கட்சிகளுக்குள்ளும், இதுவிடயத்தில் பல்வகை கருத்துகள் உள்ளன. இதன் வெளிச்சத்தில், திறந்த, உள்ளடக்கிய, ஆரோக்கியமான உரையாடலை ஊக்குவிப்பதும், பரவலாக்கப்பட்ட ஆட்சி மற்றும் நியாயமான வளர்ச்சிக்கான ஒரு பொறிமுறையாக மாகாண சபைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை முனைப்பாக எடுத்துக்காட்டுவதும் WTSL இன் நோக்கம் ஆகும்.
கடந்த காலங்களில் தமிழர்களின் மாகாண சபை எதிர்ப்பிற்கு பல்வேறு நியாயமான காரணங்கள் இருந்தாலும், முந்தைய முடிவுகள் சரியா அல்லது தவறா என்ற ஆய்வில் இறங்க நாம் விளையவில்லை. எங்கள் கவலை எல்லாம் எதிர்காலத்தைப் பற்றியதே.
கடந்த ஜூன் 29 மற்றும் ஜூலை 20 இல் நாம் நடத்திய Zoom விவாதங்களில் மாகாண சபைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிக்க முக்கிய தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் சிவில் சமூக அமைப்புகளையும் ஒரே தளத்தில் ஒன்றிணைத்தது எமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பங்கேற்ற அனைத்து பிரதிநிதிகளும் ஒத்துழைப்புடன் முன்னோக்கிச் சென்று செயல்பட ஒப்புக் கொண்டுள்ளனர்.
இக் கூட்டங்களில் எடுத்துக்கொள்ளப்பட சில முக்கிய முடிவுகள், உடன்பாடுகள், கருத்துக்கள் பின்வருமாறு:
• எல்லை நிர்ணயம் பற்றிய தீர்மானங்கள் எடுக்கும் வரை மா.ச. தேர்தலை காலவரையின்றி பின்போடாது, பழைய விகிதாசார முறைப்படி தேர்தலை நடத்த தேவையான திருத்தச் சட்டத்தை முன்வைக்க அரசை சம்மதிக்க வைக்க வேண்டும்.
• கடந்த அரசாங்கத்தில் திரு சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட திருத்தச் சட்ட்டத்தை JVP ஆதரித்தது; மூன்றாம் வாசிப்புக்கு போகமுன்னர் அரசு கலைக்கப்பட்டுவிட்டது. அதே திருத்தத்தைத்தான் திரு சாணக்கியனும் இவ்வாண்டு மே மாதத்தில் முன்வைத்துள்ளார். ஆகவே அரசுடன் மோதாமல் அதை ஆமோதிக்க வைக்க முயற்சிகள் செய்யப்படவேண்டும்.
• முழுமையாகவும் முறையாகவும் இயங்கும் மா.ச. பற்றிய நன்மைகளை விளக்கி அடிமட்ட நிலையில் வடக்கிலும் தெற்கிலும் நேர்மையாக பிரச்சாரம் செய்யவேண்டும். சட்டவல்லுநர்கள், புத்திஜீவிகள் ஆகியோரின் துணையுடன் மக்களிடையே இருக்கும் தவறான புரிதல்களை களையவேண்டும்.
• “JVP அடிப்படையில் அதிகாரப் பகிர்வுக்கு எதிரானவர்கள். … தமது வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்கு முக்கியமானது. … ஆகவே தமிழ், முஸ்லீம், மலையக மக்கள், மற்றும் சிங்கள எதிர்க்கட்சி அரசியல் வாதிகள் ஒன்றாக இணைந்து அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான அடிமட்ட வேலைகள் செய்யப்பட வேண்டும். EPRLF அப்படியான கருத்துக்களைத்தான் கொண்டுள்ளது. அதற்கான சில நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம்.” — Mr. Suresh Premachandran
• Mr. Rauff Hakeem, MP; முன்னைநாள் சபாநாயகர் Karu Jayasooriar; முன்னைநாள் தேர்தல் ஆணையாளர் Mahinda Deshapriya, மற்றும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் (NMSJ) — இவர்கள் உட்பட மேலும் பல முற்போக்கு சக்திகள் இதற்கு குரலும், ஆதரவும் அளித்து வருகிறார்கள்.
• தேர்தலை நடத்தாது பின்னடிப்பது என்பது அரசு பங்கேற்பு ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், NPP கொடுத்த வாக்கின்படி செயற்படவில்லை, அது மக்களின் உணர்வுகளை மதிக்கவில்லை என கரும்புள்ளி குத்தப்படுவது அதன் வருங்கால அரசியலுக்கு குந்தகம் விளைவிக்கும் என்றும் எடுத்துரைத்து அரசை வழிக்குக் கொண்டுவரவேண்டும். இவை பயனளிக்காத பட்சத்திலேயே கையெழுத்து வேட்டை போன்ற வேறுபட்ட அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.
• இது தொடர்பான பாராளுமன்ற ஆலோசனைக் குழு 24/7 அன்று கூடவிருக்கிறது.
மாகாண சபை முறையை எதிர்க்கும் கட்சிகள் அல்லது தனிநபர்கள் எதிர்கால விவாதங்களில் கலந்து கொள்ளவும், அவர்களின் கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொள்ளவும் WTSL ஆர்வமாய் இருக்கிறது. சமநிலையான மற்றும் உள்ளடக்கிய விளைவை அடைவதற்கு மாறுபட்ட கருத்துக்களைக் கேட்பது மிக முக்கியம் என்று நாங்கள் நம்புகிறோம்.
மேலும், தற்போதைய அரசியலமைப்பின் கீழ் மாகாண சபை முறையை முழுமையாக செயல்படுத்த உறுதிபூண்டுள்ள இலங்கை சிவில் சமூகக் குழுக்களுடன் (தமிழ், சிங்கள, முஸ்லீம், மலையக சமூகத்தினர்) நாங்கள் தீவிரமாக ஒத்துழைத்து வருகிறோம். இந்த அமைப்புகளில் பல தொடர்ந்து தங்கள் ஆதரவை வழங்குகின்றன. அர்த்தமுள்ள முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக அவர்களுடன் இணைந்து பணியாற்ற நாம் எதிர்பார்க்கிறோம்.
WTSL ஒரு கட்சி சார்பற்ற நடுநிலையான அமைப்பாகும். எமக்கு எந்த அரசியல் நிகழ்ச்சி நிரலும் இல்லை, எந்த அரசியல் கட்சியுடனும் நாங்கள் இணைக்கப்படவில்லை. திறந்த மற்றும் ஆக்கபூர்வமான விவாதத்திற்கான தளத்தை வழங்குவதே எங்கள் குறிக்கோள். எங்கள் அர்ப்பணிப்பு கடந்த கால பிளவுகளில் அல்ல, நமது மக்களின் கண்ணியம், உரிமை மற்றும் எதிர்கால நல்வாழ்வில்தான் வேரூன்றியுள்ளது.
அன்பான வாழ்த்துக்கள்,
ராஜ் சிவநாதன்
சர்வதேச ஒருங்கிணைப்பாளர், WTSL, Melbourne
Email: rajasivanathan@gmail.com, phone: +61412067019
