கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை வழக்கில் இருந்து நீக்குவதற்கான கோத்தபாய ஆட்சிக்கால சதி முறியடிக்கப்பட்டள்ளது.
முன்னதாக இலங்கை சட்டமா அதிபரின் முடிவை ரத்து செய்யக் கோரி காணாமல் போன இளைஞர்களின் பெற்றோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் இன்று (15) அனுமதி அளித்துள்ளது.
உண்மைகளை நீண்ட நேரம் பரிசீலித்த பிறகு, மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது, பின்னர் இந்த மேல்முறையீட்டு மனுவை ஜனவரி (30) அன்று விசாரிப்பதற்கான திகதியை நிர்ணயித்தது.
2008-2009 ஆம் ஆண்டுகளில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வானில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் வசந்த கரன்னாகொட மற்றும் 13 பேருக்கு எதிராக முன்னாள் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் 11 இளைஞர்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதில்லை என சட்டமா அதிபர் கடந்த கோத்தபாய ஆட்சிக்காலமான 2021ஒக்டோபரில் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்திருந்தார்.
