இலங்கை வடபகுதியின் யாழ்.மாவட்டத்தின் மாவிட்டபுரம் கிராமத்தில் 1942.10.27 ஆம் திகதி பிறந்தவர். 2025.01.29 ஆம் திகதி காலமானார்.
அமரர். மாவை சேனாதிராசா அவர்கள் தனது இளம் வயதிலிருந்தே அரசியல் நடவடிக்கைகளில்; ஈடுபட்டவர். தமிழினத்தின் விடிற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து மிகத்தீவிரமாக செயற்பட்டவர். மாவைஅண்ணர், சேனாதிஅண்ணர், மாவை, சேனாதி, மாவைசேனாதி என்றெல்லாம் அன்பாக அழைக்கப்பட்ட இவர் இன்று இல்லை என்ற நிலையில் தமிழினம் சோகக்கடலில் ஆழ்ந்துள்ளது.
இலங்கையில் தமிழர்க்கான பிரச்சினைகள் பற்றிய அரசியல் பிரச்சாரங்களிலும், போராட்டங்களிலும் தீவிரமான பேச்சாளராக விளங்கியவர். சர்வதேச அளவிலும் தமிழர்களுக்கான குரலை எழுப்பிய தலைவராக பல நாடுகளுக்குச் சென்று, தமிழரின் பிரச்சினைகள் பற்றிய விபரங்களை எடுத்தியம்பியவர்.
அரசியற் செயற்பாடுகளில் மிகத் தீவிரமாக செயற்பட்டதன் விளைவாக, இலங்கை அரசாங்கத்தினால் பதினொருமுறை கைதுசெய்யப்பட்டார். பல சிறைச்சாலைகளில் ஏழு ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டார்.
தமிழர்களின் விடுதலையை வேண்டி நின்ற தலைவர்களில் மூத்த தலைவராக விளங்கிய அமரர் மாவை சோமசுந்தரம் சேனாதிராசா அவர்களின் இழப்பு தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாகும். அவரின் இழப்பால் துயருறும் நாமும் அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டி நிற்கின்றோம்.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்
எஸ் ரி எஸ் தமிழ்த் தொலைக் காட்சி
தமிழ் எம் ரி வி


