யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டார பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதிக்கு மிக அருகாமையில் எல்லைக் கற்கள் நாட்டும் பணிகளை தொல்லியல் திணைக்களம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
முன்பதாக குறித்த பகுதியில் எல்லைக் கற்களை தொல்லியல் திணைக்களம் முறையான அனுமதி பெறாது கற்களை நாட்டுவதாக கடந்த 16.09.2025 அன்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நேரடியாக சென்று ஆராய்ந்தார்.
அத்துடன் குறித்த எல்லைக்கற்கள் வீதிக்கு அருகாமையாக காணப்படுவதனால் பாரதூரமான வீதி விபத்துக்கள் ஏற்படக்கூடிய சாத்தியப்பாடு காணப்படுவதாகவும் , இது தொடர்பாக தொல்லியல் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளருக்கு தெரிவிக்கப்பட்டு அவரும் நேரடியாக வருகைதந்து பாா்வையிட்டார்.
நாட்டப்பட்ட 48 எல்லைக்கற்களையும் அப்புறப்படுத்துவதுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அளவுப் பிரமாணங்களுக்கமைய குறித்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் எழுத்து மூல அனுமதியினைப் பெற்று எல்லைக்கற்களை நாட்டுவதற்கான நடவடிக்கைகளும் அரச அதிபரால் முன்னெடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட திணைக்களத்திற்கு கடிதம் மூலமும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தொல்லியல் திணைக்களம் முறையான அனுமதியைப் பெற்று மீண்டும் குறித்த எல்லைக் கற்களை நாட்டும் பணியை தற்போது முன்னெடுத்து வருகின்றது.
இதேநேரம் குறித்த காணி அறிக்கையிடப்படாத நிலையில், பற்றைகளால் சூழ்ந்து கணப்பபடுவதுடன், அதிகளவான கனரக வாகனங்கள் தரித்து நிற்கும் இடமாகவும் மாறிவருவதால் அதன் புனிதத் தன்மை சீரழிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டும் சமூக ஆர்வலர்கள், இவ்வாறு அறிக்கை இடப்படுவது சுற்றுச் சூழலுக்கும், அவ்விடத்தின் பாதுகாப்புக்கும் சிறந்தது என்றும் சுடிக்காட்டியுள்ளனர்.
