முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் துறவற நூற்றாண்டு விழா நிகழ்வில், மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் புறக்கணிக்கப்பட்டதால், அவர் தனது உறுப்பினர்களுடன் நிகழ்விலிருந்து வெளிநடப்புச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்ற சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்கிரமரத்ன பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுவாமி விபுலானந்தரின் நூற்றாண்டு விழா, மானிப்பாய் இந்துக் கல்லூரியில் இன்று காலை வெகு விமரிசையாகத் தொடங்கியது. நிகழ்வின் ஆரம்பத்தில், சபாநாயகர் உள்ளிட்ட விருந்தினர்கள் பேரணியாக விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, சுவாமி விபுலானந்தரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இந்த நிகழ்வில் சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் எனப் பலருக்கும் உரிய முக்கியத்துவமும், முன்னுரிமையும் அளிக்கப்பட்டன. ஆனால், நிகழ்வு நடைபெற்ற பிரதேசத்தின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியான மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் திரு. ஜசீதனுக்கு முறையான கௌரவம் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அவருக்கு உரிய ஆசனம் ஒதுக்கப்படாமல், அவர் ஒரு ஓரமாக அமர வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதனால் அதிருப்தியும் குழப்பமும் அடைந்த பிரதேச சபை உறுப்பினர்கள், தவிசாளரிடம் இது குறித்து முறையிட்டுள்ளனர். தமக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையை அடுத்து, தவிசாளர் ஜசீதனும் ஏனைய பிரதேச சபை உறுப்பினர்களும் நிகழ்வைப் புறக்கணித்து அங்கிருந்து வெளியேறினர்.
குறிப்பிடத்தக்க வகையில், இந்த நிகழ்வானது இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. ய. அனிருத்தனால் மானிப்பாய் பிரதேச சபை தவிசாளருக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவ்வாறு அழைப்பின் பேரில் நிகழ்வுக்கு வருகை தந்த ஒரு மக்கள் பிரதிநிதி அவமதிக்கப்பட்டமை பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பிரதேசத்தில் நடைபெறும் அரச நிகழ்வில், அந்தப் பிரதேசத்தின் தலைவரைப் புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தமது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
