யாழ் பல்கலைக்கழகத்தில் ‘அலர்’ கவிதைநூல் வெளியீட்டு விழா
மு/விசுவமடு ம.வி. பழைய மாணவி டிலக்சியின் படைப்பாற்றலுக்கான பாராட்டு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் கல்வி கற்கும் இளையக் கவி டிலக்சியின் முதல் கவிதைத் தொகுப்பான ‘அலர்’ எனும் நூல் நேற்று (12.11.2025) கைலாசபதி கலையரங்கில் வெளியிடப்பட்டது.
புவியியல் துறைத்தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராசா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார்.
நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலைப்பீடாதிபதி பேராசிரியர் எஸ். ரகுராம், கௌரவ விருந்தினராக கவிஞர் இ. த. ஜெயசீலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக, அண்மையில் உயிர்நீத்த நூலாசிரியரின் தந்தையாருக்காக சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் தொடங்கின. பின்னர், மொழியியல் ஆங்கிலத்துறை மாணவி செல்வி வி. திவ்ஜா வழங்கிய வரவேற்புரையுடன் விழா முன்னெடுக்கப்பட்டது.
துணைவேந்தர் வெளியிட்ட நூலின் முதல் பிரதியினை கிருபா சாரதி பயிற்சிக்கல்லூரின் உரிமையாளர் திருமதி தனித்தா கிருபாகரன் பெற்றுக்கொண்டார்.
நூலுக்கான நயவுரை (Book Review)வை கவிஞர் முல்லைத்தீபன் நிகழ்த்தினார். இரு மணித்தியாலங்கள் நீடித்த நிகழ்வில் சுருக்கமான உரைகளே இடம்பெற்றன எனத் தெரிவிக்கப்பட்டது.
முழு நிகழ்வையும் வரலாற்றுத்துறை மாணவன் செல்வன் க. கவிதரன் சிறப்பாக தொகுத்து வழங்கினார். இறுதியில், நன்றியுரையுடன் நூலாசிரியர் டிலக்சி விழாவை இனிதே நிறைவு செய்தார்.
கிளி/கண்டாவளையைச் சேர்ந்த மு/விசுவமடு ம.வி.யின் பழைய மாணவியான டிலக்சி, தனது படைப்பின் மூலம் புதிய இலக்கியக் குரலாக பல்கலைக்கழக வளாகத்தில் பாராட்டைப் பெற்றுள்ளார்.
