டக்ளஸ் இல்லை:இனி சந்திரசேகரனாம்!
நடந்து முடிந்த தேர்தலில் பெரும் வெற்றியை தனதாக்கிக்கொண்ட தேசிய மக்கள் சக்தி தனது வடக்கிற்கான அமைச்சராக சந்திரசேகரனை நியமித்துள்ளது.
அவ்வகையில் இலங்கையின் புதிய அமைச்சரவையில் கடற்றொழில், நீரியல் வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் பதவியேற்றுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் அமைச்சராக தமிழ் மொழியில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (18) காலை நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் ஊடாக இராமலிங்கம் சந்திரசேகர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராகவும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், யாழ் மாவட்ட அமைப்பாளராகவும் கடந்த காலங்களில் இவர் பணியாற்றியிருந்தார்.
யாழ் மாவட்டத்தில் இம்முறை தேசிய மக்கள் சக்தி அதிக வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவான 27 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட 13 பேர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
இதேவேளை நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் 141 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாகவும் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசியப்பட்டியல் ஊடாகவும் தெரிவான நிலையில் மொத்தமாக 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.