
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள் மற்றும் உணவு தயாரிப்பு நிலையங்களில் நேற்று (11) மாலை பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் அதிகளவான மக்கள் வசிக்கும் மாமாங்கம் பொது சுகாதார பிரிவு மற்றும் இருதயபுரம் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஆகியவற்றில் சோதனையிடப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அ.முரளீஸ்வரனின் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமாரின் வழிகாட்டலின் கீழ் மாமாங்கம் பொது சுகாதார பரிசோதகர் ரி.பகீரதன் மற்றும் இருதயபுரம் பொது சுகாதார பரிசோதகர் என்.கருணாகரன் ஆகியோர் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினால் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது மாமாங்கம் பொது சுகாதார பிரிவில் சுமார் 10 உணவு விற்பனை நிலையங்கள், உற்பத்தி நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மூன்று உணவு விற்பனை நிலையங்களுக்கு எதிராக ஐந்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதேபோன்று இருதயபுரம் பொது சுகாதார பிரிவில் சுமார் 23 உணவு விற்பனை நிலையங்கள், உற்பத்தி நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் 13 விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதன்போது, உணவு தயாரிப்புக்காக பயன்படுத்தக்கூடிய புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய உணவுப் பண்டங்கள் பெருமளவான பொருட்களும் பாவனைக்கு உதவாத பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன.