
ஒரு வாரமாக சுரேஸ் சாலேயுக்காக குரல் கொடுத்த பருவகால பட்சிகள் இப்போது மத்தியகிழக்குப் போரின் பக்கம் பறந்துவிட்டன. ஈரானின் போர்க்கப்பலை இலங்கைக் கடல் எல்லையில் அமெரிக்கா தாக்கியதை அநுர அரசு எவ்வாறு பார்க்கிறது?
அரசியல்வாதிகளை பருவகால பட்சிகள் என்று பொதுவாகக் கூறுவார்கள். அவ்வப்போது எது எது கண்ணில் முக்கியமாகப்படுகிறதோ அதனை முன்னிலைப்படுத்தி செயற்படுவதை இது குறிக்கும்.
இதில் இலங்கை அரசியல்வாதிகள் இனமத பேதமின்றி ஒருமுகப்பட்டவர்கள். அவ்வப்போது திடீரென வாகனங்கள் சுழன்று திரும்புவதுபோல இவர்களுடைய செயற்பாடுகள் அமைந்திருக்கும். கடந்த வாரம் இடம்பெற்ற முக்கிய விடயத்தை மறந்து இந்த வாரத்தில் இன்னொரு விடயத்துக்குள் தம்மைப் புகுத்தி விடுவார்கள்.
Beaches & Islands
இதற்கு நல்லதொரு உதாரணமாக, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் குற்றத்தடுப்பு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் சுரேஸ் சாலேயின் விடயத்தைப் பார்க்கலாம். இவர் கைதானதை தூக்கிப் பிடித்து குய்யோ முறையோ என்று கத்தியவர்களின் குரலை இப்போது காணவில்லை.
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர ஆகிய சிங்கள தேசிய நாயகர்கள், சுரேஸ் சாலே கைதான விடயத்தில் என்னென்ன சொன்னார்கள்? இந்த விடயத்தை முன்வைத்து நாட்டை முடக்கப் போவது போன்று பேசித் தள்ளினார்கள். குற்றத்தடுப்பு திணைக்களத்தை முற்றுகையிடுவார்கள் போன்று இவர்களது வீரவசனங்கள் அமைந்திருந்தன.
கடந்த மாதம் 25ம் திகதி தனியார் பணியகம் ஒன்றில் வேலைக்குச் சென்று கொண்டிருக்கையில் பேலியகொட என்ற இடத்தில் வைத்து சுரேஸ் சாலே கைது செய்யப்பட்டார். தொடர்ந்து 90 நாட்கள் குற்றத்தடுப்பு திணைக்களத்தில் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தது.
இதன் அடுத்த கட்டமாக, 2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணையில் இவர் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளாரென்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது, சுரேஸ் சாலேயை மிகவும் நெருக்கமாக கண்காணிக்க அனுமதிக்குமாறு நீதிமன்றத்திடம் இந்த மனு ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறு தொடர்ச்சியாக சம்பங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில், சுரேஸ் சாலேக்காக முன்னர் குரல் கொடுத்தவர்கள் காணாமல் போய்விட்டார்கள். ரணில் விக்கிரமசிங்க கைதானபோது குற்றத்தடுப்பு திணைக்களத்தை முற்றுகையிட்டது போன்று சுரேஸ் சாலே விடயத்திலும் இடம்பெறலாமென எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.
இவரது கைது தொடர்பாக இரண்டு மனுக்கள் தாக்கலாகியுள்ளன. ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியொருவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சுரேஸ் சாலேயின் தடுப்புக்காவல் தொடர்பாக அவரது மனைவி மற்றொரு மனுவை சமர்ப்பித்துள்ளார். திணைக்கள தடுப்புக்காவலில் அவரை பார்வையிடவும், வீட்டிலிருந்து உணவு கொண்டு சென்று வழங்கவும், வழக்கறிஞர்கள் அவரைச் சந்தித்து கலந்துரையாடவும் தற்போதுள்ள தடைகளை நீக்க வேண்டுமென இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் கையளிக்கப்படும் முன்னர் சுரேஸ் சாலேக்காக முன்னின்ற ஒருவரையும் காணவில்லை. பிள்ளையான் கைது செய்யப்பட்டபோது அவரை தடுப்பு காவலில் சந்திப்பதற்கு தம்மை ஒரு வழக்கறிஞராக அடையாளப்படுத்திய உதய கம்மன்பில எங்கே என்று தெரியவில்லை. இன்னும் சில நாட்களுக்கு சுரேஸ் சாலே தடுத்து வைக்கப்படுவாரானால் ரணிலும் மற்றைய அரசியல்வாதிகளும் செய்ததுபோல இவரும் திடீர் நோயாளியாகி சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்படக்கூடும். அதுதானே வழமையான நடைமுறை.
இவரது கைதை இனவாத செயலாக ஊதிப்பெருப்பித்து, அதன் மூலம் குளிர்காய்ந்து அரசியல் லாபம் பெறலாமென முயன்றவர்கள் அது பயனளிக்கப் போவதில்லையென்று தெரிந்தவுடன் இப்போது தமது செயற்பாடுகளை புதிய திசைக்கு திருப்பியுள்ளனர். இது மத்திய கிழக்கு போர்.
இதுவே இப்போது பெரிதாக பேசுபொருளாக இவர்களுக்குக் கிடைத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இஸ்ரேலையும் இணைத்துக் கொண்டு ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்து ஒரு வாரமாகிறது. மூன்றாவது உலக யுத்தத்தின் ஆரம்பமாக இது இருக்குமென பலரும் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். ஈரானின் அதியுயர் தலைவர் கொமனி கொல்லப்பட்டுள்ளார். அடுத்தடுத்த தலைவர்கள் போரைக் கொண்டு நடத்துகிறார்கள். மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் அனைத்தும் யுத்த மேகத்தால் சூழப்பட்டுள்ளன. கொல்லப்பட்டோர் தொகை, போரின் உண்மையான நிலை ஆகியவற்றை சரியான தகவல்களை முழுமையாக அறிய முடியாத நிலையில் போர் தொடங்கியுள்ளது.
மத்திய கிழக்கு கலாச்சாரம்
ஒரு குறிப்பிட்ட இலக்குடன் போர் இடம்பெறுவதாகச் சொன்னாலும் இதன் பாதிப்பு உலகு முழுவதுக்குமானது. எண்ணெய் விலை, தங்கத்தின் விலை மட்டுமன்றி நாளாந்த வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துமே ஏறிக்கொண்டு போகிறது. போர் மேலும் சில வாரங்கள் தொடருமானால் சில நாடுகளில் பட்டினிப் போர் காணப்படும். போரில் வெல்பவர்கள் யார் என்பதைவிட இதன் பாதிப்பு முழு உலகுக்குமானது என்பதே யதார்த்தம். இதனையிட்டு எவரும் கவலைப்படுவதாக இல்லை.
2003ல் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் பு~; ஈராக் மீது ஆரம்பித்த யுத்தத்தை ட்ரம்பின் ஈரான் மீதான யுத்தம் நினைவூட்டுகிறது. அன்று அமெரிக்கா ஈராக்கில் இரசாயன குண்டு இருப்பதாகக் கூறிக்கொண்டு யுத்தத்தை நடத்தியது. ஆனால் இதுவரை அது கண்டுபிடிக்கப்படவில்லை. உண்மையில் அந்தப் போரின் இலக்கு ஈராக் அதிபர் சதாம் ஹ{சேனாக இருந்தது. இதுபற்றி தமிழ்நாட்டு சஞ்சிகை ஒன்று கீறிய கேலிச்சித்திரத்தில் – அமெரிக்கா கண்டுபிடித்த ஈராக்கின் இரசாயனக் குண்டு சதாம்; ஹ{சேன் என்று கீறியிருந்தது.
ஈரான் அதிபர் கொல்லப்பட்ட பின்னரும் அமெரிக்கா முன்னெடுத்திருக்கும் போர் தொடருகிறது. உக்ரைன் மீது ரஸ்யா நடத்திக் கொண்டிருக்கும் போரின் அவலக் காட்சிகளை இங்கு ஒவ்வொரு நிமிடமும் காணக்கூடியதாகவிருக்கிறது. மத்திய கிழக்கில் குண்டுகள் வெடித்துக் கொண்டிருக்கையில் இலங்கையின் தென்பகுதியில் சுமார் 22 மைல் கடல் எல்லைக்கப்பால் சர்வதேச கடற்பரப்பில் ஈரானுக்குச் சொந்தமான கடற்படைக் கப்பல் ஒன்று தாக்குதலுக்குள்ளானது. அக்கப்பலில் இருந்த 160 கடற்படையைச் சார்ந்தவர்கள் அரைவாசிக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஐ.ஆர்.ஐ. எஸ். டேனா என்ற ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று தாக்கி அழித்ததாக அறிவிக்கப்பட்டது. இதில் காயங்களுடன் மீட்கப்பட்ட ஈரானியப் படையினர் இலங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஈரானிய போர்க்கப்பல் எவ்வாறு இலங்கையை அண்மித்த கடலில் வந்தது. அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் எவ்வாறு அடையாளம் கண்டது. ஈரானிய கப்பலை கடல் எல்லைக்குள் அனுமதிக்க இந்தியா மறுத்ததா. இவ்வாறு பல கேள்விகள் இலங்கை அரசியலில் எழுந்துள்ளன.
இலங்கையின் பாதுகாப்பு வலயத்தில் ஈரானிய கப்பல் மீது எவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டது என்று பொதுஜன பெரமுன எம்.பி. நாமல் ராஜபக்ச கேள்வி கேட்டுள்ளார். அதேவேளை, ஈரானிய போர்வீரர்களை இந்தியா கேவலமாக நடத்தியுள்ளதென பெரமுனவின் இன்னொரு எம்.பி.யான சாமர சம்பத் இந்தியாவை சாடியுள்ளார்.
தாக்கி அழிக்கப்பட்ட கப்பல் யாருடையது, யார் அழித்தார்கள் என்பது எமக்குத் தெரியாது. தாக்குதலுக்கு உள்ளான தகவல் கிடைத்ததும் மனிதாபிமான அடிப்படையில் தங்கள் அரசு செயற்பட்டது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ளார். இலங்கைக்குள் வந்த ஈரானிய கப்பலில் வந்தவர்களுக்கு கொழும்பில் அடைக்கலம் கொடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமர பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
1970களில் அணிசேரா நாடுகளுக்கு தலைமை தாங்கிய இலங்கையின் கொள்கையிலேயே இலங்கை இருப்பது போன்ற காட்சி ஆளும் தரப்பினரின் கூற்றுகள் ஊடாக தெரியவருகிறது. உண்மையிலேயே இது அணிசேரா கொள்கையா அல்லது நடுநிலைமையா என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. ஆனால், ஈரானுக்கு ஆதரவான கருத்துகள் இலங்கை அரசியல் கட்சிகளிடையே பரவப்பட்டு வருகிறது. கொல்லப்பட்ட ஈரானின் அதிபருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஆனால், தமிழர் தேசிய அரசியலும் அவர்களின் தலைவர்களின் போக்கும் என்னவென்று தெரியவில்லை. மத்திய கிழக்கில் போர் ஆரம்பமாகிவிட்டது என்பதே தெரியாததுபோல பாசாங்கு பண்ணிக் கொண்டிருப்பது ஏன். எங்கு போர் நடந்தாலும் முதலில் பலியாவது அப்பாவிப் பொதுமக்களே என்பது கூடவா தெரியவில்லை.
