யேர்மனியில் நூல் அறிமுகவிழா – 04.04.2026
‘காலம் கடந்த கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு..
திருமதி வேணி கிருபாகரன் – கவிஞர், எழுத்தாளர்..
யேர்மனியில் வசிக்கும் கவிஞரும் எழுத்தாளரும் தமிழாசிரியரும் பொதுச் சேவையாளருமான திருமதி வேணி கிருபாகரன் (இவர்களின் தாயகம் மட்டுவில்-கைதடி) அவர்களின்’காலம் கடந்த கதைகள்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு நூலின் அறிமுகவிழா 04.04.2026 அன்று யேர்மனியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதரவுடன் இடம் பெற்ற இந்த விழாவிற்கு இந்தச் சங்கத்தின் தலைவரும் யேர்மனி தமிழ்க் கல்விச் சேவையின் தலைவருமான திரு பொ சிறீஜீவகன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவானது யேர்மனியின் வரைபடத்தின் மேல்ப்பகுதியிலுள்ள வைசன்கவ்சர் ஸ்ராண்ட் (Weissenhäuser Strand) என்ற இடத்திலுள்ள சுற்றுலா மையத்திலுள்ள அழகான மண்டபத்தில் நடைபெற்றது.
இளவேனிற்காலம் நல்ல சூரியப் பிரகாசம் எனக் காலநிலையும் ஒத்துழைக்க பெரும்திரளான மக்கள் மத்தியில் இந்த நூல் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது. யேர்மனியின் பல பாகங்களிலிருந்தும், நெதர்லாண்ட், டென்மார்க், சுவீஸ்லாந்து நாடுகளிலிருந்தும் பல இலக்கிய ஆர்வலர்கள், உறவுகள், நண்பர்கள் எனக் கலந்து கொண்டு ஒரு குடும்ப விழாப்போல மகிழ்சியாக இந்த நிகழ்வு நடைபெற்றது.
அறிவிப்பாளராகக் கடமையாற்றிய எழுத்தாளரும் கவிஞருமான திருமதி சோபியா பாஸ்கரன் அவர்கள் திறம்பட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். அகவணக்கம், தமிழ்மொழிவாழ்த்து, வரவேற்பு நடனம், வரவேற்புரையைத் தொடர்ந்து தலைவரின் உரை இடம் பெற்றது.
இந்த நூலின் ஆசிரியரின் அறிமுக உரையையும் வாழ்த்துரையையும் யேர்மனி’மண்’ கலை இலக்கிய, சமூக சஞ்சிகையின் ஆசிரியர் வை சிவராசா வழங்கினார். ஆய்வுரைகளை சுவீஸ்லாந்திலிருந்து வருகைதந்த எழுத்தாளர் திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களும் ஜெனீவா தமிழ் இலக்கியப் பேரவையின் தலைவரும் எழுத்தாளருமான திரு க அருந்தவராசா அவர்களும் சிறப்பாக ஆய்வுரை செய்தனர்.
பின்னர் நூல் வெளியீட்டின் போது நூலாசிரியரும் அவரது கணவரும் சமூகச் செயற்பாட்டளாளருமான திரு செ கிருபாகரனும் நூலை எடுத்துக் கொடுக்க இளைப்பாறிய ஆசிரியர் திரு க பொன்னுத்துரை அவர்கள் அனைவருக்கும் வழங்கி வைத்தார். இந்த நூலைப் பெறுவதற்குப் பார்வையாளர்வகள் வரிசையில் நின்று மகிழ்வுடன் பெற்றுக் கொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
தொடர்ந்து இடம்பெற்ற வாழ்த்துரையின் போது பத்துக்கும் மேற்பட்டோர் தமது வாழ்துரைகளை வழங்கி மகிழ்ந்ததைப் பார்த்தபோது இந்த நூலாசிரியரின் எழுத்து, தமிழ், கல்வி, சமூகப் பணிகளின் சிறப்புகள் சபையோருக்கு மேலும் தெரியவந்தபோது பலர் மகிழ்ந்து கரகோசம் செய்து பாராட்டினார்கள்
இந்த நூலாசிரியரின் சிறப்பான தமிழ், கல்வி பணியால் மாணவர்களின் கருத்தாடல் நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றுச் சபையோரின் பாராட்டைப் பெற்றது. மாணவ மணிகள் ஒன்று சேர்ந்து நூலாசிரியரை வாழ்த்தி மலர்ச்செண்டுகளை வழங்கித் தமது அன்பையும் பாராட்டையும் தெரிவித்த போது சபையோர் பெரும் கரகோசம் செய்து மகிந்தனர்.
நூலாசிரியர் தனது ஏற்புரையில் கடந்து வந்த பாதைகளையும் தான் எழுதிய சிறுகதைகளையும் அவை எழுதப்பட்ட காலங்களின் நாட்டுச் சூழலின் யாதார்த்த விடயங்களையும் எடுத்துக் கூறினார். தனக்கு ஏற்பட்ட மனத்தாக்கங்களையும் தான் நேரில் கண்ட நிகழ்வுகளையும் ரசித்த, பார்த்த, , கேட்ட அனுபவங்களையும் இக்கதைகள் மூலம் வெளிப்படுத்திய தன்மைகளையும் தாக்கக்கங்களை தனது சிறுகதைகளில் எடுத்துக்கூறியதாகவும் தெளிவு படுத்தினார்.
தனக்கு விழிகாட்டியாக இருந்த தமது தாய் தந்தையரையும் சகோதரங்களையும் நினைவுகொண்டு வாழ்த்தி மகிழ்ந்தார்.தனது இந்தநூல் அறிமுக விழாவிற்கு வருகைதந்த அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் வழங்கினார். தனது கணவன், பிள்ளைகள் சேயோன், இனியா ஆகியோரின் ஒத்துழைப்பு, முயற்சி, உழைப்பின் காரணமாகவே இந்த நூல் வெளியானது என நன்றியோடு எடுத்துரைத்தார்.
உண்மைதான் எல்லோரும் கூறுவார்கள் ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள்’ என்று. இங்கே இந்த நூலாசியர் திருமதி வேணியின் உயர்ச்சிக்கும் வெற்றிக்கும் மூலகாரணமாகவும் பக்கபலமாகவும் இருந்து செயற்பட்டவர் என்றால் அவரது அன்புக் கணவரான திரு கிருபாகரன்தான் என்றால் அது சிறப்புத்தான். சபையோர் அவரையும் வாழ்த்தி மகிந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. இவ்வேளையில் அவருக்கு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
விழா நிகழ்வுகள் நான்கு மணிநேரம்தான் இடம்பெற்றன. மண்டப அலங்காரம், விழா ஒழுங்குகள், நிகழ்ச்சி நிரல், உரைகள் என அத்தனை விடயங்களும் சிறப்பாவும் நேர்த்தியாகவும் ஒழுங்கமைக்கப்பட்டு சீரும் சிறப்புடன் இந்த விழா ஒரு வெற்றி விழாவாக நிறைவு கண்டது.
பார்வையாளர்களும் சிற்றுண்டிகள் , குளிர் பானங்கள், கோப்பி, தேநீர் வகைகளை உண்டு குடித்த மகிழ்வோடு நல்லதொரு நிகழ்வைக் கண்டுகளித்த மன நிறை வோடு விடைபெற்றனர்..இந்த விழா மிகச் சிறப்பாக நடைபெற ஒத்தழைத்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் பாராட்டுகள்!…
வை.சிவராசா – பிரதம ஆசிரியர் – மண் சஞ்சிகை – யேர்மனி – 06.04.2026