தனது உள்கட்டமைப்பு மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சூளுரைத்துள்ளது.
ஈரானின் எரிசக்தித் தளங்கள் , பாலங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளுக்கு எதிராக அதிபர் டோனல்ட் டிரம்ப் விடுத்த அச்சுறுத்தல்களை அமெரிக்கா செயல்படுத்தினால், அமெரிக்காவுடன் தொடர்புடைய உள்கட்டமைப்புகளைத் தாக்குவோம் என ஈரான் எச்சரித்துள்ளது .
அமெரிக்க முதலீடு
இதுபோன்ற எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுப்பதே ஈரானின் எதிர்வினையாக இருக்கும் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறினார்.
ஈரானின் உள்கட்டமைப்பு தாக்கப்பட்டால், நாங்களும் அதேபோல் பதிலடி கொடுப்போம் என்பதை எங்கள் ஆயுதப் படைகள் தெளிவுபடுத்தியுள்ளன.
அமெரிக்காவிற்குச் சொந்தமான, அல்லது அந்நாட்டுடன் ஏதேனும் ஒரு வகையில் தொடர்புடைய, அல்லது ஈரானுக்கு எதிரான அதன் ஆக்கிரமிப்புக்குப் பங்களிக்கும் அதுபோன்ற எந்தவொரு உள்கட்டமைப்பையும் எங்கள் ஆயுதப் படைகள் குறிவைக்கும்.
இதை நாங்கள் தாமாக முன்வந்து அல்லது மனமுவந்து செய்யும் முடிவின்படி செய்ய மாட்டோம். இது, அவர்களுடைய சட்டவிரோதச் செயலுக்கு எதிரான எங்களின் தற்காப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.
ஈரானிய உள்கட்டமைப்புக்கு எதிராக டிரம்ப் அதிகரித்து வரும் இணையவழி அச்சுறுத்தல்களைக் கண்டித்த பல நாடாளுமன்ற உறுப்பினர்களில், ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃபும் ஒருவர்.
போர்க்குற்றங்கள் செய்வதால் உங்களுக்கு எதுவும் கிடைக்காது என்று அவர் கூறினார்.