தமிழ் தேசியப் போராட்டத்தின் ஆதித்தூண்களில் ஒருவரும், சர்வதேச அரங்கில் தமிழினத்தின் நீதிக்காக ஓயாது குரல் கொடுத்தவருமான திரு. தம்பித்துரை முத்துக்குமாரசாமி அவர்கள் அமெரிக்காவில் இயற்கை எய்தினார் என்ற செய்தி, ஈழத் தமிழ் மக்களைப் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.
யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், வெறும் சாட்சியமாக மட்டுமல்லாமல், வரலாற்றைச் செதுக்கிய ஒரு நாயகனாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார் என்பது மதிப்புக்குரியது.
1970களில் தமிழ் மாணவர் பேரவையின் ஊடாகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய இவர், ரெலோ அமைப்பின் முன்னோடிகளான தங்கத்துரை, குட்டிமணி ஆகியோருடன் இணைந்து ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பப் புள்ளிகளில் ஒருவராகத் திகழ்ந்தார். தாய் நாட்டின் தேசிய விடுதலைக்காய் தன்னை முழுவதுமாய் ஈடுபடுத்திய ஒரு மாமனிதனாக அவர் வாழ்ந்தமை பெருமைக்குரியது.
சிங்களப் பேரினவாத அரசின் ஒடுக்குமுறைக்கு அடிபணியாமல், தனது இளமைக் காலத்தில் ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைக்கொடுமைகளை அனுபவித்த ஓர் விடுதலைக் குரலாய் விளங்கினார். 1972 முதல் பலமுறை சிறை சென்றபோதும், அவரது இலட்சிய உறுதி என்றுமே தளரவில்லை; ஒரு உன்னத விடுதலைப் போராளியாகவே இறுதிவரை தன்னை முன்னிலைப்படுத்தி வாழ்ந்தமை போற்றுதலுக்குரியது.
தமிழீழத்தின் முதல் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் திருவுருவச் சிலையை யாழ் குடாநாட்டின் உரும்பிராயில் திறந்து வைத்து, தியாகத்தின் மேன்மையை உலகிற்குப் பறைசாற்றிய பெரு மனிதன்.
சிறைவாசத்திற்குப் பிறகு, சர்வதேசச் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற இவர், சர்வதேச மன்னிப்புச் சபையின் நியூயோர்க் தலைமையகத்தில் 22 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரச்சார இயக்குநராகப் பணியாற்றினார். தனது பதவியைப் பயன்படுத்தி, ஈழத் தமிழ் மக்களின் மனித உரிமை மீறல்களை ஐக்கிய நாடுகள் சபை வரை கொண்டு சென்ற பெருமை இவருக்குரியது.
”விடுதலை என்பது வெறும் கனவல்ல, அது ஒரு தொடர் அர்ப்பணிப்பு” என்பதைத் முன்னிறுத்தி அதன் வழி தனது இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டியவர்.
அரசியல் களமாகட்டும், மனித உரிமைப் போராட்டமாகட்டும், அவரது வழிகாட்டல் ஈழத் தமிழர்களின் வரலாற்றில் அழியாத சுவடுகளை விட்டுச் சென்றிருக்கிறது. போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் அவர் ஆற்றிய பணிகள், ஈழ விடுதலை வரலாற்றின் புரட்சிப் பக்கங்களில் பொறிக்கப்பட வேண்டியவை.
