புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் தூதரகங்களில் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்படுகிறது. தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் தமிழர்களிடம் மட்டும் அதிகளவு பணம் பறிப்பதாக பாதிக்கப்பட்ட பலர் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ், ஜெர்மனி உட்பட பல நாடுகளில் இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள 300 முதல் 500 யூரோ வரை பணம் அறவிடப்படுகிறது. சிலரிடம் 700 யூரோ அறவிடப்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. முறையான ஆவணங்கள் இருந்தும் முறையான காலப்பகுதியில் வழங்காமல் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது.
பல தமிழர்கள் இலங்கை கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துவிட்டு பல ஆண்டுகளாக காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அவர்கள் கோரும் பணத்தைக் கொடுத்தால் குறிப்பிட்ட சில நாட்களில் கடவுச்சீட்டு கையளிக்கப்படுகிறது. பலருக்கு ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு மஞ்சள் துண்டு வழங்கப்பட்ட போதும், கடவுச்சீட்டை வழங்குவதில் தாமதங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
தூதரகங்களில் பணியாற்றும் குறிப்பிட்ட சில அதிகாரிகள் தமிழ் மக்களைக் குறிவைத்து இந்த பணப்பறிப்பில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இது ஒரு திட்டமிட்ட ஊழல் வலைமைப்பாக உருவெடுத்துள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தாய்நாட்டைப் பிரிந்து புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக தூதரகங்களை நாடும்போது, அங்கேயே இவ்வாறான சுரண்டல்களுக்கு உள்ளாவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு உரிய விசாரணை நடத்தி வெளிப்படைத்தன்மையுடன் கூடிய சேவையை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.”
