வெடுக்குநாறி மலை தொடர்பாக பௌத்த சாசன அமைச்சர் சுனில் செனவி நேற்றைய தினம் 09.04.2026 பாராளுமன்றில் உரையாற்றும் பொழுது வவுனியா வெடுக்குநாறி மலையில் காணப்படும் தடயங்கள் அனைத்தும் பௌத்தத்திற்குரியது என தெரிவித்தது மட்டுமல்ல விரைவில் வர்த்தமாணி படுத்தப் படும் எனவும் தெரிவித்துள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள இந்த கருத்தை நாம் மிக வண்மையாக கண்டிக்கிறோம்.
வெடுக்குநாறி மலை என்பது தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு தளமாக நீண்டகாலமாக இருந்து வருகின்றது.இங்கு வழிபாட்டு முறைமை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயமாக நீண்ட காலமாக சைவ சமயத்தவர்களால் வழிபாடு நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிட தக்க விடயமாகும்.
அப்பகுதி மக்களின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொடர்ச்சியான ஆன்மீகச் செயல்பாடுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. இவ்வாறான சூழலில், எந்தவித பரந்த ஆய்வும் இல்லாமல் ஒருதலைப்பட்சமாக இத்தளம் பௌத்த மதத்தினருக்குரியது என அறிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
இந்த ஆட்சியாளர்கள் இதன் மூலம் மிக தெளிவாக தமது இனவாத மதவாத போக்கினை கடைப்பிடிக்கிறார்கள் என்பதற்கு இதைவிட ஆதாரம் தேவையில்லை. இது மிக மோசமான அதிகார துஸ்பிரயோகமாகும்.
இத்தகைய அறிவிப்புகள்:
வரலாற்று உண்மைகளை மறைக்கும் முயற்சியாகும்.
தமிழ் மக்களினது மத மற்றும் கலாச்சார உரிமைகளை மீறும் செயலாகும்.
சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்.
பல இன, பல மத மக்கள் இணைந்து வாழும் நாட்டில், பொறுப்பான பதவியில் உள்ளவர்கள் சமநிலையுடனும் நியாயத்துடனும் கருத்து வெளியிட வேண்டும். எந்த ஒரு சமூகம் அல்லது மதத்தினரின் உரிமைகளையும் புறக்கணிக்கும் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் பெரும் பாதிப்புகளை உருவாக்கக்கூடும்.
எனவே, நாம் வலியுறுத்துவது:
அமைச்சர் வெளியிட்ட கருத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
வெடுக்குநாறி மலை தொடர்பாக சுயாதீன மற்றும் உண்மையான விஞ்ஞான ரீதியான ஆய்வு நடத்த வேண்டும்.
அப்பகுதி மக்களின் வரலாற்று மற்றும் வழிபாட்டு உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இவ்விடயத்தில் நீதியும் சமத்துவமும் நிலைநிறுத்தப்படும் வரை எங்களது ஜனநாயகமான எதிர்ப்பும் நடவடிக்கைகளும் தொடரும்.
நன்றி.
தலைவர் ச.சிவயோகநாதன்
கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம்.