
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி, யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த சிங்கக் கொடியை இறக்கி, அதற்குப் பதிலாகக் கறுப்புக்கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரும், பல்கலைக்கழகப் பதிவாளரும் குற்றத் தடுப்பு காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து வந்த விசேட உத்தரவின் பேரில் யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவின் குற்றத்தடுப்பு பணியக அதிகாரிகளே இன்று விசாரணை மேற்கொண்டதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பாக சுமார் 3 மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள், துணைவேந்தர், பதிவாளர் ஆகிய இருவரிடமும் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
Tourist Destinations
பல்கலைக்கழகத்தில் இருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட அறிக்கைகள், ஆதாரங்கள் மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலே விசாரணை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே பல்கலைக்கழக வளாகத்தினுள் காவல்துறை குற்றத்தடுப்பு பணியக வாகனம் பிரசன்னமானவை மாணவர்களிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.
மாணவர்களை அச்சமூட்டி அவர்களது கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை முடக்க அனுர அரசு முற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
