தமிழ் இனத்தின் விடிவுக்காய்
தமதுயிரை அளி(ழி)த்தவர்கள்
—————————————
»மாவீரர்கள் காலத்தால் சாகாதவர்கள்.சுதந்திரச்சிற்பிகள் எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீர மறவர்கள் எமது இனத்தின் சுதந்திரத்திற்காக,கௌரவத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை ஈர்ந்துள்ள இந்த மகத்தான தற்கொடையாளர்கள் காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்»—கே.பாலா
தமிழினத்தின் இறையாண்மை வேர்களாக தமிழீழ மண்ணைப் பற்றியிருக்கும் மாவீரர்களைப் போற்றும் மாவீரர் நாள் பற்றி கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதிய உயிர்ப்பான வரிகள்»மாவீரச் செல்வங்கள் மண்கிழித்து வெளிவந்து சாவீரச் செய்தி சாற்றி உறவுரைத்து பேசும் நாள்”.என்பதாகும் இவர்கள்தான் தமிழினம் போற்றி வணங்கும் ,சிங்களத்தேசம் அஞ்சி நடுங்கும் ,சர்வதேசம் விழியுர்த்திப் பார்க்கும் எங்கள் மாவீரர்கள். மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் உயிர்க்கொடை தந்த இந்த புனிதர்களுக்கு மக்கள் ஒன்றுகூடி வணக்கம் செய்யும் மாவீரர் நாள் நவம்பர் 21 ஆம் திகதி முதல் நவம்பர் 27ஆம் திகதி வரை தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
உலகத் தமிழர் வரலாற்றில் தமிழர்களுக்கென விடுதலை நோக்கிய பயணத்தை மேற்கொள்வதற்காக தனித்தமிழர் மரபு வழி இராணுவத்தை தரை, கடல் என கடந்து வான் படையை நிறுவி பற்றுறுதியோடு தமிழர் நாமென்ற தலை நிமிர்வுடன் தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் தாங்கள் கொண்ட கொள்கையில் இறுக்கமான பற்றுறுதி கொண்டவர்களாய் தமிழீழ தேசத்தையும் அதன் விடுதலையையும் அதிகம் நேசித்தவர்கள். தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு செயல் உருவம் கொடுத்தவர்கள், தமிழ்த் தேசிய இனத்தின் இறையாண்மையை பிரயோகிக்கவும் களமாடி, தமிழ்த் தேசிய இனத்தின் சுதந்திர வேள்விக்கு தம் உயிர்களை வித்தாகி விருட்சமாய் மிளிர்பவர்கள் மாவீரர்கள்.
»எமது வீர விடுதலை வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால்எழுதப்பட்டிருக்கின்றது. இவர்களது இறப்புகள் அர்த்தமற்ற இழப்புகள் அல்ல, இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்துசக்தியாக, எமது போராட்டத்தின் உயிர் மூச்சாக, எமதுபோராளிகளின் உறுதிக்கு உத்வேகம் அளிக்கும் ஊக்குசக்தியாகஅமைந்துவிட்டன. இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாதவர்கள்.சுதந்திரச்சிற்பிகள் எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீர மறவர்கள் எமது இனத்தின் சுதந்திரத்திற்காக,கௌரவத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை ஈர்ந்துள்ள இந்தமகத்தான தற்கொடையாளர்கள்(தியாகிகள்) காலம் காலமாக எமதுஇதயக் கோவிலில் பூசிக்கப்படவேண்டியவர்கள்.
ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கையை வாழும் ஒருசாதாரண மனிதப் பிறவி அல்ல அவன் ஓர் இலட்சியவாதி ஓர் உயரியஇலட்சியத்திற்காக வாழ்பவன் தனக்காக வாழாமல் மற்றவர்களுக்காகவாழ்பவன். மற்றவர்களின் விடிவுக்காக, விமோசனத்திற்காக வாழ்பவன்.சுயநலமற்ற, பற்றற்ற அவனது வாழ்கை உன்னதமானது. அர்த்தமுள்ளசுதந்திரம் என்ற உன்னத இலட்சியத்திற்காக அவன் தனது உயிரையும்அர்ப்பணிக்கத் துணிகிறான். எனவே, விடுதலை வீரர்கள் அபூர்வமானமனிதப்பிறவிகள், அசாதாரணமான பிறவிகள்» என்றார் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
1989ஆம் ஆண்டு தொடக்கம் »மாவீரர் நாள்» எனும் பெயருடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் முல்லைத்தீவு மணலாற்றுப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.அன்று தொடக்கம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21 ஆம் திகதி மாவீரர் நாள் ஆரம்பமாகி நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினமே சர்வதேசமே எதிர்பார்த்திருக்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உரை இடம்பெறுகின்ற நாளாகவும் இருந்தது.
மாவீரர் நாளாக நவம்பர் 27 விடுதலைப் புலிகளால் 1989 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. வீரப் பரம்பரையைத் தொடங்கிய முன்னோடியாக1982ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி தமிழீழ விடுதலைப்போராட்டப் பயணத்தில் முதல் வித்தாகி வீரச் சாவடைந்த லெப்ரினன்ட் சங்கர் நினைவாக நவம்பர் – 27 அன்றைய நாள் மாவீரர் நாளாகக் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனினால் 1989 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது.2008ஆம் ஆண்டு நடந்த மாவீரர் தினமே தமிழீழ விடுதலைப் புலிகளால் பெரும் எடுப்பில் அனுஷ்டிக்கப்பட்ட இறுதி மாவீரர் தினமாகவும் அமைந்தது.
1207 போராளிகள் வீரச்சாவு கண்டிருந்த காலத்தில், 1989 ஆண்டில் முதலாவது மாவீரர் நாளின் போது விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆற்றிய உரையில் »இதுவரை காலமும் எங்களுடைய இனத்தில் வீரர்கள் என்றால் யாரென்று கேட்கும் நிலையிருந்தது. இன்று எம்மினத்தின் வீரர்களை நினைவுகூரும் நாள் ஒன்றை உருவாக்கியுள்ளோம். இனி எமது இனம் நிச்சயமாக அழியாது. அவர்களுடைய வீரமான, தமது உயிரையே மதியாது போராடிய உண்மையான தியாகம்தான் எங்களுக்கு இன்று உலக நாடுகளில் ஒரு மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த மாவீரர் நாளை நாங்கள் எங்களுடைய வாழ்நாளில் முக்கியமான நிகழ்வாகக் கருதி ஒவ்வொரு வருடமும் கொண்டாடவுள்ளோம்» என்று அன்று பிரகடனம் செய்திருந்தார்.
1982-11- 27 ஆம் திகதி முதல் 27-11-2008 வரை 22390 போராளிகள் மாவீரர்களாகியுள்ளனர் .இவர்களின் முதல் ஆண் மாவீரராக 1982-11- 27ஆம் திகதி முதல்வித்தாகி வீரச் சாவடைந்த லெப் சங்கரும் (செல்வச்சந்திரன் சத்தியநாதன் கம்பர்மலை, வடமராட்சி, யாழ்ப்பாணம்)முதல் பெண் மாவீரராக 10.10.1987 ஆம் ஆண்டு கோப்பாயில் இந்திய இராணுவத்துடன் நடந்த நேரடி மோதலில் வீரச்சாவடைந்த 2ஆம் லெப்டினன்ட் மாலதியும்(சகாயசீலி பேதுறு – ஆட்காட்டிவெளி, மன்னார்)உள்ளனர்.
தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12 மணிக்கு என்றிருந்தது. 1994ஆம் ஆண்டு முதல்,மாவீரர் நாள் நள்ளிரவில் இருந்து, மாலை 6.05 மணிக்கு மாற்றப்பட்டது. முதல் மாவீரன் லெப். சங்கர் வீரச்சாவடைந்த நேரமும் அதுவாகும். இதற்கு முன் தலைவரின் மாவீரர் நாள் உரை அமையும். மாவீரர் உரை முடிந்ததும் 6.05 மணிக்கு தமிழீழம் எங்கணும் அனைத்துத் தேவாலய மணிகளும் ஒரு நிமிடம் மணியெழுப்பும். அதன் பின் அகவணக்கம் செலுத்தப்படும். மாவீரர் துயிலும் இல்லங்கள் யாவற்றிலும் ஒவ்வொரு கல்லறைக்கும் நடுகல்லுக்கும் முன்னால் பெற்றோர் உரித்தாளர்கள் போன்றோரால் சுடர் ஏற்றப்படும். துயிலும் இல்லத்தின் நடுமேடையிலும் பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்படும்.
முதலாவது மாவீரர் துயிலும் இல்லம், கோப்பாயில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் கோப்பாய் துயிலுமில்ல மண்ணில், போராளிகளின் வித்துடல்கள் விதைக்கப்பட்டதோடு, எரிக்கப்பட்டும் வந்தன. 1991இல் வித்துடல்கள் எரிக்கப்படமாட்டாது, விதைக்கப்படும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.இம்முடிவானது, போராளிகளுள் மிகப் பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே எடுக்கப்பட்டது . வித்துடல்கள் புதைக்கப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டபின், முதன்முதலான கப்டன் சோலையின் வித்துடல் கோப்பாய் துயிலும் இல்லத்தில், 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் திகதி விதைக்கப்பட்டது.ஆரம்பத்தில் பிராந்தியங்களுக்கு ஒரு துயிலும் இல்லமாக இருந்து பின்னர் மாவட்டங்களுக்கு ஒன்று என விரிவாக்கபட்டது. பின்னர் மேலும் பல மாவீரர் துயிலும் இல்லங்கள் பிரதேச ரீதியாக அமைக்கப்பட்டது. வித்துடல் கிடைக்காமல் போனால், நினைவுக்கற்கள் நாட்டும் வழமை, உண்டு. அதே சமயத்தில் வித்துடல் ஒரு துயிலும் இல்லத்திலும், அவருக்கான நினைவுக்கல் இன்னுமோர் துயிலும் இல்லத்திலும், வைப்பது இன்னுமொரு வழமையாகும்.
தமிழீழத்திற்கான உரிமைப்போரில் வீரச் சாவடையும் மாவீர்களுக்காக கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லம்,மட்டக்களப்பு மாவட்டத்தில் தரவை மாவீரர் துயிலுமில்லம்,தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம்,கண்டலடி மாவீரர் துயிலுமில்லம்,மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லம்,திருகோணமலை மாவட்டத்தில் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்,தியாகவனம் மாவீரர் துயிலுமில்லம்,பெரியகுளம் மாவீரர் துயிலுமில்லம்,உப்பாறு மாவீரர் துயிலுமில்லம்,வடக்கு கணத்தில் மணலாறு மாவட்டத்தில் ஜீவன்முகாம்/ உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம்,கோடாலிக்கல்/ புனிதபூமி மாவீரர் துயிலுமில்லம்,வவுனியா மாவட்டத்தில் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம்,மன்னார் மாவட்டத்தில் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லம்,பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம்,முள்ளிக்குளம் மாவீரர் துயிலுமில்லம்,முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம்,விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்லம்,அளம்பில் மாவீரர் துயிலுமில்லம்,ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்,வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம்,கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்,முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம்,யாழ்ப்பாண மாவட்டத்தில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம், சாட்டி மாவீரர் துயிலுமில்லம், எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம்,உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் என்பன அமைக்கப்பட்டிருந்தன.
போராட்டக் காலத்தில் மாவீரர் நாளில் பல மாவீரர் குடும்பங்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்துவர். கொடியேற்றுதல், ஈகைச்சுடரேற்றுதல், மலர்தூவி அஞ்சலி செய்தல் என்பன மாவீரர்நாளின் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெற்றன அதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர்நாள் உரையும், விடுதலை வேட்கையையும், வீர உணர்வுகளையும் தரக்கூடியதான கலைநிகழ்வுகளும், பல்வேறு நினைவுகூர் நிகழ்வுகள், உரைகளும் இடம்பெற்றன. மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் கௌரவிக்கப்பட்டனர் .
புலம்பெயர் நாடுகளிலும் தமிழர்தேசத்தில் கடைப்பிடிக்கப்படும் அத்தனை முறைகளும் மாவீரர்நாளில் கடைப்பிடிக்கப்படுகின்றன . மாவீரர் துயிலும் இல்லமும், கல்லறைகளும் செயற்கை முறைகளில் வடிவமைக்கப்பட்டு அதற்கென ஒரு மண்டபத்தில் வைத்து மாவீரர்கள் நினைவுகூரப்படுகிறார்கள். முன்னர் புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் மாவீரர் நாள் அந்தந்த நாடுகளின் விடுமுறைகளோடு ஒட்டி, ஈழமக்களின் வசதிக்கேற்றபடி நாள் குறிக்கப்பட்டு நினைவுகூரப்பட்டது. தற்போது அந்த நிலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு மாவீரர் நாளான நவம்பர் 27ஆம் தைக்கதையே அனேகமான புலம்பெயர் நாடுகளில் மாவீரர்நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது.
தமிழர்தேச ,புலம்பெயர் தமிழர் அனைவரும் மாவீரர் நாளன்று தமிழ் மக்களைக் காக்க இன்னுயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும்,
«மொழியாகி,
எங்கள் மூச்சாகி – நாளை
முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை
உருவாக்கும் தலைவன்
வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கு
துயில்கின்ற வேங்கை
வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்
தமிழீழப் போரில்
இனிமேலும் ஓயோம் உறுதி!»
என்று கூறி உறுதிமொழியை எடுப்பார்கள்.மாவீரர் நாளின் போது அந்த நாளுக்கென்று பாடப்பட்ட இந்த மாவீரர் பாடல் முதலாவதாக 1991ஆம் ஆண்டு கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஒலித்தது. இதை எழுதியவர் கவிஞர் புதுவை இரத்தினதுரை.
விடுதலைப் புலிகளினால் அனுஷ்டிக்கப்பட்ட இறுதி மாவீரர் நாள் 2008ஆம் ஆண்டு ஆகும். அப்போதிருந்த மாவீரர் துயிலும் இல்லங்களின் எண்ணிக்கை -27. மாவீரரின் கல்லறை மற்றும் நினைவுக்கல் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை அந்த வருடத்தின் அக்டோபர் 31ஆம் திகதி வரை 22,114 மாவீரர்கள் வீரச்சாவு அடைந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகள் மாவீரர் பணிமனை அறிவித்திருந்தது. இவர்களில் 17,305 ஆண் மாவீரர்களும் 4,809 பெண் மாவீரர்களும் உள்ளடங்குகின்றனர். கரும்புலிகள் 372 .இவர்களில் தரைக் கரும்புலிகள் 113 மற்றும் கடற்கரும்புலிகள் 259 உள்ளடங்குகின்றனர். எல்லைப்படை மாவீரர்கள்- 281 இதில் பெண்கள்- 5 , ஆண்கள்-276 . காவற்துறை மாவீரர்கள் – 50 இதில் பெண்கள்- 3 ,ஆண்கள்-47 ஆகும் . மாமனிதர்கள் -19 மற்றம் நாட்டுப்பற்றாளர்கள்-480 இதில் பெண்கள்-28, ஆண்கள்-452 31-10-2008 முதல் 27-11-2008 வரை 276 மாவீரர்கள் உள்ளடங்களாக 2008 மாவீரர் எழுச்சி நாள் வரையில் 22390 மாவீரர்கள் எனப் பதிவுகள் குறிப்பிடுகின்றன .இன்னொரு பதிவு 1982 முதல் 18.05.2009 காலை வரை களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களின் எண்ணிக்கை 27,000 என்கின்றது.
விடுதலைப்புலிகளினால் 2008 ஆம் ஆண்டு இறுதியாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாளில் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆற்றிய உரையில் »எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவுக்காக தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும்வரை தொடர்ந்து போராடுவோம். தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வாழ்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களை பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்» என்றார்.
எனவே »எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவுக்காக தொடர்ந்து போராடுவோம்»என்ற உறுதியுரையை தன்மானத் தமிழர்களாக எடுப்போம். தமிழர்களாய் ஒன்றிணைவோம் ,தலைவர் வழி நடப்போம் .தமிழ் தேசம் பாதுகாப்போம்.
