
சட்டவிரோத தையிட்டி விகாரைக்காக தன்னால் அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட காணிகளில் ஒரு துண்டு நிலத்தையும் , மீள காணி உரிமையாளர்களுக்கு கையளிக்க மாட்டேன் என விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகள் , தையிட்டி விகாராதிபதி , அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கொழும்பில் நேற்றைய தினம் புதன்கிழமை கூடி கலந்துரையாடிய போதே , விகாராதிபதி விகாரைக்கு என அறிக்கைப்படுத்தப்பட்ட காணியில் இருந்து சிறு துண்டு நிலத்தையும் விடுவிக்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அதனால் கூட்டம் நீண்ட இழுபறியுடன் எவ்வித முடிவுகளும் எடுக்கப்படாமல் முடிவுற்றுள்ளது. அடுத்த கூட்டம் மிக விரைவில் கூட இருப்பதாக அறிய முடிகிறது.
காணி உரிமையாளர்களின் குற்றச்சாட்டு.
தையிட்டி விகாரைக்கு என 19 பேரின் காணிகள் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ளது. எங்கள் காணிகளின் உறுதிகளை விகாரை பிரச்னையை தீர்த்து வைக்கிறோம் என வரும் சகல தரப்பினருக்கும் வழங்கி வருகிறோம்.
அந்த வகையில் விகாரை பிரச்சனையை தீர்ப்பதற்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டு குழுவிடமும் எங்கள் காணி உறுதியை வழங்கியுள்ளோம்.
ஆனால் , விகாரை பிரச்சனையை தீர்ப்பதாக கூறி அவர்கள் இதுவரை பல்வேறு கட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர். அந்த கலந்துரையாடல் எவற்றுக்கும் எம்மை அழைக்கவில்லை. விகாரதிபதியை மாத்திரம் அழைத்து கலந்துரையாடுகின்றனர். இது ஒரு பக்க சார்பான நடவடிக்கை என்பது அப்பட்டமானது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தையிட்டி விகாரை பிரச்சனையை தீர்ப்பதாக கொழும்பில் கூடி கலந்துரையாடுகின்றனர். அங்கு என்ன விடயம் கலந்துரையாடப்பட்டது என்பது தொடர்பில் எமக்கோ , ஊடகங்களுக்கோ எவரும் தெரிவிப்பதில்லை.
யாழ்ப்பாணத்தில் இருந்து மாவட்ட செயலர் , தெல்லிப்பழை பிரதேச செயலர் , தையிட்டி விகாராதிபதி ஆகியோரை கொழும்புக்கு அழைத்து கலந்துரையாடுகின்றனர்.
கலந்துரையாடலுக்கு சென்ற மாவட்ட செயலரோ , கலந்துரையாடலை நடத்தியவர்களோ , கூட்டத்தில் கலந்துரையாடிய விடயம் தொடர்பில் வெளியே சொல்லாது , இரகசியமாகவே கலந்துரையாடுகின்றனர். இவர்கள் இவ்வாறு இரகசியமாக கலந்துரையாடி தாமே தீர்மானங்களை எடுத்த பின்னர் , அதனை எங்கள் மீது திணிக்க போகின்றார்களோ என்ற அச்சம் எமக்கு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
வேலி அமைக்க நிதி ஒதுக்கப்படவில்லை.
தையிட்டி விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட காணிகளை கட்டம் கட்டமாக விடுவிப்பதாகவும் , அதற்கு முதல் கட்டமாக ஒரு தொகுதி காணியை விடுவிக்கும் முகமாக விகாரையை சுற்றியுள்ள பகுதியை கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள வேலியை பின் நகர்த்த தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செய்திகள் வெளியாகி இருந்தன.
அது தவறான செய்தி எனவும், வேலியை பின் நகர்த்துவதற்கு என தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு எவ்வித நிதியையும் ஒதுக்கவில்லை என பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
தையிட்டி விகாரை வேலியை பின் நகர்த்த தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு நிதி கிடைத்து உள்ளதாகவும் , வேலியை பின் நகர்த்தி அமைக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை தனக்கு வேண்டியவருக்கு வழங்க வேண்டும் என பிரதேச சபை தவிசாளர் ஒருவர் பிரதேச செயலரிடம் வலியுறுத்தி வந்ததாகவும் , தவிசாளர் ஒருவர் அவ்வாறான ஒப்பந்தத்தை பெறுவது ஊழல் எனவும் அதனை தாம் தடுத்து நிறுத்தியதாகவும் , தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சில சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
