மக்களின் காணி மக்களுக்கே என்ற எமது அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டின் பிரகாரம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்து , காணி உரிமையாளர்களை அடையாளம் கண்டு அவற்றை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்துள்ளார்.
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கும் , கடற்தொழில் அமைச்சர் , மாவட்ட செயலர் , தெல்லிப்பழை பிரதேச செயலர் , நிலஅளவை திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை விசேட கலந்துரையாடல் நடைபெற்றது
குறித்த கலந்துரையாடலின் பின்னர்,ஊடகங்களுக்கு அமைச்சர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் காணி மக்களுக்கே என்ற எமது அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டின் பிரகாரம் , தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இது தொடர்பிலான விசேட கலந்துரையாடல்கள் கடந்த காலங்களில் கொழும்பில் நடைபெற்றது. நீதி அமைச்சர் , புத்தசாசன அமைச்சர் , மாவட்ட செயலர் , தெல்லிப்பழை பிரதேச செயலர் உள்ளிட்ட தரப்பினருடன் நானும் இணைந்து கலந்துரையாடல்களில் பங்கேற்று , காணிகளை மக்களிடம் கையளிக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.
அதன் அடிப்படையில் தற்போது வரையில் 17 காணி உரிமையாளர்களை அடையாளம் கண்டு , அவர்களின் உறுதிகளை உறுதிப்படுத்தியுள்ளோம்.
அதன் அடிப்படையில் தற்போது காணி உரிமையாளர்கள் தமது காணி எல்லைகளை அடையாளப்படுத்தி , காணிகளை அளவீடு செய்வதன் ஊடாக அவர்களுக்குரிய காணிகளை அவர்களுக்கு வழங்க முடியும் என்பதால் எதிர்வரும் 17ஆம் திகதி காணிகளை அளவீடு செய்யும் பணிகளை முன்னெடுக்கவுள்ளோம்.
காணி உரிமையாளர்கள் தமது காணிகளை அளவீடு செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கி , தமது காணிகளின் எல்லைகளை அடையாளம் காட்டினால் அந்த காணிகளை அளவீடு செய்து , காணி வரைபடங்களை கீறி , அந்த காணி உரிமையாளர்களிடமே காணிகளை கையளிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
காணி அளவீட்டு பணிகள் முடிவடைந்து காணிகள் அடையாளம் காணப்பட்டு , அதன் உரிமையாளர்களை உறுதி செய்தவுடன் காணிகளை அவர்களிடம் மிக மிக விரைவில் கையளிப்போம் என தெரிவித்தார்.