
தான் செய்யாக் கருமத்தை
தான் தனதாக்கி
வீண் வரிகள் கொண்டு
விலாசம் தேடும்
மனிதர்களைப் பார்க்க
விந்தையாய் உள்ளதையா!
என்ன மொழி கொண்டு
எடுத்து நாம் உரைக்க
இவர்கள் செயலை!
விரிந்த வெளிதனில்
பரந்து பரவசமாய்
பார்ப்போர் புகழ என்று
யார் யாரோ செய்ததெல்லாம்
நான் செய்தேன் எனப்
பரப்பும் பொய்களை
என்ன மொழி கொண்டு
எடுத்து நாம் உரைக்க
இவர்கள் செயலை!
பரபரப்பாய் பொய் ஒன்றை
நீங்கள் பரப்ப என்னி
விசைப்பலகையில் எழுதும்போது
விரல்களும் அஞ்சவில்லையோ?
என்ன மொழி கொண்டு
எடுத்து நாம் உரைக்க
இவர்கள் செயலை!
பிறர் உம்மை நகையாடி
புகழ் தேடும் பித்தர் என்று
பொழுதெல்லாம் வசைபாடி
நிற்கப் புகழாரம் வேண்டுமோ?
என்ன மொழி கொண்டு
எடுத்து நாம் உரைக்க
இவர்கள் செயலை!
ஏளனம் பேசுவோர்க்கு அஞ்சாமல்
எள்ளி நகையாடுவோர் பற்றி எண்ணாமல்
புகழுக்காய் புளுகும் புளுகர் தம்மை
புன்னகைத்து கடப்பதைத் தவிர
என்ன மொழி கொண்டு
எடுத்து நாம் உரைக்க
இவர்கள் செயலை!
ஆக்கம் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா (24.02.2026
