
மாணவர்களுக்கான வாழ்க்கை திறன் பயிற்சி மற்றும் பெற்றோர்களுக்கான பெற்றோர் திறன் பயிற்சி ஆகியனவற்றை வழங்கும் மனோஹரி திட்டத்தை வடக்கு மாகாணத்தின் ஏனைய கல்வி வலயங்களுக்கும் விரிவாக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்தார்.
பாடசாலை மாணவர்களின் உளநல மேம்பாடு தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் மனோஹரி செயற்றிட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (10.02.2026) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஆளுநர்,
முன்னைய காலங்களில் மாணவர்கள் பாடசாலையில் அல்லது பாடசாலைச் சூழலில் தங்கள் நேரங்களைச் செலவிடுவதே அதிகமாக இருந்தது. அதனால்தான் அவர்களால் பல்வேறு துறைகளிலும் சாதிக்க முடிந்தது. ஆனால் இன்று அந்த நிலைமை இல்லை. மாணவர்களுக்கோ அல்லது பெற்றோருக்கோ தூரநோக்கான இலக்குகள் இல்லை. அதேபோன்று, முன்பு மிகவும் அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர் சமூகம் ஒன்று இருந்தது. இன்று அந்த அர்ப்பணிப்புக்களும் குறைந்துவிட்டன.
இன்று மாணவர்கள் நடப்பதற்குக்கூட சிரமப்படுகிறார்கள். பெற்றோர்கள் காலை 7.30 மணிக்கு பாடசாலை வாயிலில் பிள்ளைகளை இறக்கிவிட்டு, மீண்டும் பிற்பகல் 1.30 மணிக்கு பாடசாலை வாயிலில் காத்திருக்கிறார்கள். மாணவர்களைச் சிறிது தூரம் நடக்கவிடக்கூட பெற்றோர்கள் தயாரில்லாத நிலையே காணப்படுகின்றது.
பாடசாலை மாணவர்களுக்கு உளநல மேம்பாடு தொடர்பான இத்திட்டம் மிகவும் அவசியமானது. சமூக மட்டத்தில் உளவளத்துணை தொடர்பில் ஒரு தவறான கண்ணோட்டம் உள்ளது. இது மாற்றப்பட வேண்டும். யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் இத்திட்டம் வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட வேண்டும், என்றார்.
இக்கலந்துரையாடலில், யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் உளநலன் சார்ந்த வாழ்க்கைத் திறன் பயிற்சி தொடர்பில் வைத்திய கலாநிதி சி. நவநீதன் விளக்கமளித்தார்.
அவர் குறிப்பிடுகையில், ‘உள்நாட்டுப் போர், அதிர்ச்சி சம்பவங்கள் மற்றும் இடப்பெயர்வு போன்ற காரணங்களால் பல குடும்பங்கள் இன்று செயலற்ற நிலையில் உள்ளன. மன அழுத்தம் உள்ளிட்ட உளநலப் பிரச்சினைகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். மாணவர்களுக்கு உளநலன் சார்ந்த வாழ்க்கைத் திறன் பயிற்சியை வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இத்திட்டமானது மாணவர்களின் ஆளுமை வளர்ச்சியை மையமாகக் கொண்ட ஒரு முழுமையான செயற்றிட்டமாகும். இது சரியான மற்றும் தவறான பாதைகளைத் தீர்மானிக்கும் அறிவுப்பூர்வமான சிந்தனையைத் தூண்டுகிறது. ஒரு செயலின் விளைவுகளை முன்கூட்டியே சிந்தித்துச் செயல்பட மாணவர்களைத் தயார்படுத்துவதோடு, அவர்களின் கவனத்தை ஆக்கப்பூர்வமான விடயங்களில் திசைதிருப்பவும், எதிர்கால இலக்குகளைத் தீர்மானித்து அதை நோக்கிப் பயணிக்கவும் இப்பயிற்சி ஊக்குவிக்கிறது, என்றார்.
இத்திட்டத்தின் மூலம் 2025ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள 7 கல்வி வலயங்களில் 43 அமர்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 127 ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்குப் பயிற்சிகளை வழங்குவார்கள் எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி, ஆளுநர் செயலக உதவிச் செயலாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு
10.02.2026
