
வேர்களும் பூக்களும் ஒன்றாக இணைந்து முனைவர் சாவித்திரி சரவணன் அவர்களை வாழ்த்திய பெருவிழா
கஸ்தூரி சலங்கை ஒலி நாட்டியக் கலா மன்றத்தின் அதிபரும், முனைவருமான சாவித்திரி சரவணன் அவர்கள் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கற்று முனைவர் பட்டம் பெற்றமையைப் பாராட்டி நடத்தப்பட்ட பெருவிழா யேர்மனியில் நடைபெற்றது. மேற்படி விழா 08.02.2026 ஞாயிற்றுக்கிழமை Dortmund நகரில் இடம்பெற்றது.
தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, இசை, நாட்டியம் போன்ற துறைகளின் ஆய்விற்கென தனித்துவமாக நிறுவப்பட்ட உயரிய கல்வி நிறுவனமாகத் திகழும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழறிவை உலகளாவிய அளவில் எடுத்துச் செல்லும் பெருமைக்குரியது. இப்பல்கலைக்கழகம் வழங்கும் முனைவர் பட்டம், ஆழ்ந்த ஆய்வும், நீண்டகாலக் கல்விப் பயிற்சியும், துறைசார் நிபுணத்துவமும் கொண்டவர்களுக்கே வழங்கப்படும் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
அவ்வகையில், நாட்டியக் கலைத் துறையில் முனைவர் சாவித்திரி சரவணன் அவர்கள் “அமைப்பியல் நோக்கில் இசைநாட்டியப் பதங்கள்” என்ற தலைப்பிலான ஆய்வினை வெற்றிகரமாக நிறைவு செய்து, முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவரது ஆய்வுப் பணி, இசையும் நாட்டியமும் ஒன்றோடொன்று இணையும் அமைப்பியல் தன்மைகளை அறிவியல் ரீதியாக விளக்கும் வகையில் அமைந்து, தமிழ் கலை மரபிற்கு மேலும் வளம் சேர்க்கும் ஆய்வாக மதிப்பிடப்படுகிறது.
இவ்விழாவினை சலங்கை ஒலி நாட்டியக் கலா மன்றத்தின் மாணவிகள், பெற்றோர்கள்
(Essen,Dortmund, Herne, Lüdenscheid நகரத்தைச் சேர்ந்த) இணைந்து, தங்களது முனைவர் சாவித்திரி சரவணன் அவர்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சியாக ஏற்பாடு செய்திருந்தனர். 1988 ஆம் ஆண்டுமுதல் இன்றுவரை அவரது கலைப் பயணத்தில் இணைந்து பயணித்த பலரும் விழாவில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
முனைவர் சாவித்திரி சரவணன் அவர்களின் மாணவிகளின் நடன நிகழ்ச்சிகளும், அதனிடையே அவருடன் பயணித்தவர்களின் சிறப்புரைகளும் விழாவிற்கு சிறப்பு சேர்த்தன. நிகழ்ச்சிகளை திரு. ரவி வெற்றிவேல் அவர்களும், சலங்கை ஒலி நாட்டியக் கலா மன்றத்தின் மாணவிகள் ரங்கவி ரவீந்திரன்
சோபிகா ஜெயமாரன்
உதிஷா உதயன் இணைந்து அழகாகத் தொகுத்து வழங்கினர்.
இளைய சந்ததியினரின் நன்றி உணர்வை தங்கள் குருவிற்கும், சமூகத்திற்கும் எடுத்துக் காட்டிய பெருவிழாவாக இவ்விழா அமைந்தது. இவ்விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த பழைய மாணவிகளும், அதனை சீராகக் கட்டமைத்து வழிநடத்திய சுஜாதா முருகதாசன் அவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள் ஆவார்கள்.
இன்றைய விழாக்களில் அவசியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய நேரக் கட்டுப்பாடு இவ்விழாவில் சிறப்பாகப் பேணப்பட்டது. குறித்த நேரத்தில் ஆரம்பித்து குறித்த நேரத்தில் நிறைவுசெய்தமை, இன்றைய இளைய தலைமுறையினரைப் பார்த்து நாம் பெருமையடையச் செய்தது எனலாம்.
மொத்தத்தில், வேர்களும் பூக்களும் ஒன்றாக நின்று வாழ்த்திய விழாவாக இவ்விழா சிறப்புடன் அமைந்தது.
