
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுக்க இருந்த 115 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து, மீள் புறப்பட திட்டமிடப்பட்டிருந்த 115 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
அதன்படி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள நாடுகளிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரவிருந்த சிறீலங்கன் மற்றும் பிற வெளிநாட்டு விமான நிறுவனங்களின் 55 விமானங்களும், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அந்தப் பகுதிக்கு புறப்படவிருந்த 60 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த 28 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்பட்ட இரண்டு ஃபிட்ஸ் ஏர் மற்றும் ஏர் அரேபியா விமானங்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாமல் மீளவும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் திரும்பியுள்ளன.
இந்நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்குச் செல்லும் பயணிகளும், அந்த பிராந்தியத்தின் வழியாக வேறு நாடுகளுக்குச் செல்லும் பயணிகளும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பு தங்கள் பயண முகவர்களை தொடர்புகொள்ளுமாறு கட்டுநாயக்க விமான நிலையப் பொறுப்பதிகாரி கோரியுள்ளார்.
மேலும், நாட்டில் தற்போது தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் விசா காலம் முடிவடைந்த நிலையில், விசா காலத்தை ஏழு நாட்கள் நீட்டிக்க குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
