
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி படுகொலைச் சம்பவத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பொன்றிலேயே இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
அமரகீர்த்தி கொலைக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு மன்னிப்பு வழங்குங்கள். இவ்வாறானவர்களை மரண தண்டனையிலிருந்து விடுவிப்பதென்பதை ஜனாதிபதி ஒரு பேனா அசைவில் செய்ய வேண்டும் என கூறினார்.
2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளுக்கு மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோர் திட்டமிட்டு இடையூறு விளைவிக்க முயன்றதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாரிய குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.
பாதுகாப்பு பேரவைக் கூட்டங்களின் போது, தனது போர்க்கள வியூகங்களுக்கு முரணான திட்டங்களை அவர்கள் முன்வைத்ததாகவும், குறிப்பாக வெலிஓயா பகுதியில் விடுதலைப் புலிகளை நான்கு திசைகளிலிருந்தும் முற்றுகையிடும் தனது திட்டத்தை எதிர்த்து, வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு நோக்கி நேரடியாக முன்னேறுமாறு அவர்கள் அழுத்தம் கொடுத்ததாகவும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் இராணுவ வெற்றியைத் தாமதப்படுத்தி, தன்னை மனச்சோர்வடையச் செய்யும் ஒரு முயற்சியே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தத்தின் இறுதி நாளான 2009 மே 17 அன்று நடைபெற்ற சம்பவங்கள் குறித்து மேலும் விளக்கிய பொன்சேகா, விடுதலைப் புலிகளின் தோல்வி உறுதியான நிலையில், அதன் முக்கியத் தலைவர்களான பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் உள்ளிட்டோரின் உயிரைக் காப்பாற்ற ராஜபக்ஷக்கள் முயன்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து, புலிகளின் தலைவர்கள் ஒரு மூன்றாவது தரப்பிடம் சரணடைவதற்குப் பின்னணி வழிகளை ஏற்படுத்த ராஜபக்ஷக்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும், இது புலிகளை முற்றுமுழுதாகத் தோற்கடிக்க வேண்டும் என்ற தனது நேரடி உத்தரவுக்கு முரணானது என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், “வெள்ளைக் கொடி” விவகாரம் என்பது தமக்கு எதிராகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு சதி என்றும், சரணடைந்தவர்களைச் சுடுமாறு தான் ஒருபோதும் உத்தரவிடவில்லை என்றும் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
