பொருளாதார மீட்சியினை நோக்கி இலங்கை அரசு பயணிப்பதாக கூறிவரும் நிலையில் இலங்கையின் முன்னணி வங்கியான தேசிய அபிவிருத்தி வங்கியில் நிதி மோசடி மூலம் சுமார் 13 பில்லியன் களவாடப்பட்டுள்ளது.
Geographic Reference
வங்கியின் உத்தியோகபூர்வமாக அறிவிப்பில் மோசடி தொடர்பில் ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டதை விட மிக அதிகளவான தொகை இழக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
கொழும்பு பங்குச் சந்தைக்கு வழங்கிய அறிவிப்பில்,இழந்த நிதியை மீட்பதற்கான நடவடிக்கைகள் சட்ட அமலாக்கப் பிரிவினரின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.
மோசடியினால் வாடிக்கையாளர்களின் கணக்கு மீதிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், வங்கியின் நாளாந்த செயற்பாடுகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதாகவும் வங்கி உறுதி அளித்துள்ளது.
இதனிடையே நிலைமையைக் கருத்திற் கொண்டு, இலங்கை மத்திய வங்கி பங்குதாரர்களிற்கான திட்டமிடப்பட்டிருந்த இலாபப்பங்கினை வழங்குவதை நிறுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளது.
மோசடியுடன் தொடர்புடைய ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வங்கியின் மூலதனம் மற்றும் திரவத்தன்மை பலமாக இருப்பதை உறுதி செய்ய இலங்கை மத்திய வங்கி தேவையான ஒத்துழைப்புகளை வழங்கி வருவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் பாரிய மோசடி பங்கு சந்தையிலும் வங்கி நடவடிக்கைகளிலும் இலங்கையில் பாதிப்பினை தோற்றுவித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.