
பெரியமடுப் படுகொலை – 25.10.2007.
மன்னார் மாந்தை மேற்கில் விவசாயத்தினைப் பிரதான தொழிலாகக் கொண்டு மக்கள் செறிந்து வாழ்கின்ற கிராமங்களில் பெரியமடு கிராமமும் ஒன்றாகும். இடம் பெயர்ந்தோர் குடியிருப்பின் மீது 25.10.2007 அன்று நண்பகல் 12மணியளவில் சிங்களப் படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் கர்ப்பிணித்தாய் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டும் ஒன்பது பேர் காயமடைந்துமுள்ளனர்.
மாந்தை மேற்குப் பிரதேச செயலர் பிரிவிலிருந்து, 2007.08.25 ஆம் நாள் தொடக்கம் இராணுவத்தின் ஷெல்வீச்சு காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் உள்ள அகதிமுகாம்களில் தஞ்சமடைந்துவருகின்றனர். இவ்வாறு இடம்பெயர்ந்து வந்தவர்களில் பெரியமடு 30 வீட்டுத்திட்ட கிராமப் பகுதியில் 23 குடும்பத்தினர் தற்காலிக கொட்டகைகள் அமைத்து வசித்துக் கொண்டிருந்தனர்.
2007 ஒக்ரோபர் 25ஆம் நாள் நண்பகல் 12மணியளவில் இக் குடியிருப்பு பகுதி மீது மன்னார் தள்ளாடி இராணுவ முகாமிலிருந்து ஏவப்பட்ட ஷெல் வீட்டின் முற்றத்தில் வீழ்ந்து வெடித்ததால் வீட்டிற்குள்ளிருந்த நிறைமாதக் கர்ப்பிணியான செல்வநாதன் பரிமளா – வயது 19, அவரின் சகோதரி தங்கவேல் கௌசல்யா – வயது 09, இவர்களின் தந்தை சோமசுந்தரம் ஜெயபாலசிங்கம் – வயது 61 ஆகியோர் உடல்சிதறிப் பலியானதுடன் பரிமளா, கௌசல்யா ஆகியோரின் தாயார் ஜெயபாலசிங்கம் திரவியம் – வயது 55 இவரது பேரப்பிள்ளை செல்வநாதன் கோகிலன் – வயது 03, பிரான்சிஸ் சுதர்சன் – வயது 15, கறுப்பையா லோகநாதன் – வயது 45, இவரின் மனைவி சிவபாக்கியவதி – வயது 45, இவர்களின் மகள் உமாதேவி – வயது 13, வசந்தன் றெபேக்கா – வயது 05, சுப்பையா மோகன்ராஜ் – வயது 29, பா.சுப்பிரமணியம் – வயது 28 ஆகியோர் படுகாயமடைந்து முழங்காவில், கிளிநொச்சி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் செல்வநாதன் கோகுலன் என்ற மூன்று வயதுக் குழந்தை மிகவும் கவலைக்கிடமான நிலையிலுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதில் குறிப்பாக நிறைமாதக் கர்ப்பணியான பரிமளாவின் வயிற்றுப் பகுதியை ஷெல்த் துண்டுகள் வெட்டி சென்றதனால் வயிற்றிலிருந்த இரணைச்சிசுக்களும் வயிற்றிலிருந்து வெளியே வந்திருந்த கோரநிகழ்வும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.



