
கெலி ஓயாவில் பாடசாலை மாணவி ஒருவர், கடத்தப்படும் சம்பவம், கேமராவில் பதிவாகியுள்ளது.
வேனில் வந்து சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தவுலகல பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. அது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய தவுலகல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு ஞாயிற்றுக்கிழமை (12) மாலை அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், சனிக்கிழமை (11) காலை வேளையில் இடம்பெற்றுள்ளது. அந்த சிறுமி, ஹந்தெஸ்ஸ பிரதேசத்தில் தங்கியிருப்பவர் என்றும் அவர், தன்னுடைய தோழியுடன் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது, வேனில் வந்த இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இந்த கடத்தல் தனிப்பட்ட காரணங்களுக்காக இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், அந்த வான், பொலன்னறுவையில் கைவிடப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினமே மீட்கப்பட்டுள்ளது. வேன் சாரதி, கம்பளையில் வைத்து தவுலகல பொலிஸாரினால் ஞாயிற்றுக்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான 30 வயதான சாரதி, கம்பளை கஹட்டபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். கடத்திய சந்தேக நபரை கைது செய்வதற்கும் தற்போதைக்கு மூன்று பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை
கண்டி – தவுலகல பகுதியில் வேனில் வந்து பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சந்தேகநபர்கள் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று (11) நடந்த இந்தக் கடத்தலின் முக்கிய சந்தேகநபர், மாணவியின் தந்தையின் சகோதரிகளில் ஒருவரின் மகன் எனத் தகவல் வெளியாகியுள்ளதாகக் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மாணவிக்கும் சந்தேகநபருக்கும் இடையில் திருமணம் செய்ய இரு தரப்பினரும் ஆரம்பத்தில் சம்மதம் தெரிவித்ததாகவும், ஆனால் பின்னர் மாணவியின் தந்தை தனது மறுப்பை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட பிரச்சனைக்குரிய சூழ்நிலை காரணமாக சந்தேகநபர் மாணவியை கடத்திச் சென்றுள்ளமை பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், மாணவியை கண்டுபிடித்து சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரைக் கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தவுலகல, ஹன்தெஸ்ஸ பகுதியில் குறித்த மாணவி தற்காலிகமாக வசித்து வந்த நிலையில், நேற்று (11) காலை தனது தோழியுடன் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தவுலகல பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்படி, கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய வேன் நேற்று பொலன்னறுவை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலன்னறுவை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி, இன்று (12) கம்பளை பகுதியில் வைத்து, குறித்த வேனின் சாரதி தவுலகல பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகத்திற்குரிய வேனின் சாரதி, கம்பளை, கஹடபிட்டிய பகுதியை சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, மாணவியைக் கடத்திச் சென்ற சந்தேகநபரான இளைஞன், முதலில் 5 மில்லியன் ரூபாயை கப்பமாக கோரியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், பின்னர் அவர் அதை 3 மில்லியனாகக் குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் அவர் மாணவியின் தந்தைக்குச் சொந்தமான வாகனத்தை கோரி, 200,000 ரூபாயை வங்கி கணக்கில் வரவு வைக்குமாறு தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, மாணவியின் தந்தை ரூ.50,000-ஐ சம்பந்தப்பட்ட கணக்கில் வரவு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Video Player