
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டமானது, ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தின் ஜெனீவா தலைமையக வளாகத்தில் அமைந்திருக்கும் ஈகை பேரொளி முருகதாசன் திடலில் 03.03.2025 அன்று பேரெழுச்சியுடன் நடைபெற்றது.
இப் போராட்டமானது, சிறிலங்கா அரசு திட்டமிட்டு நடாத்திவரும் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நீதிகோரியும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுவிக்கப்படவேண்டும் என்பதனை வலியுறுத்தியும் ஐரோப்பாவாழ் தமிழ் மக்களின் ஒன்றிணைவுடன் உணர்வெழுச்சியோடு நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தின் ஜெனீவா தலைமையக வளாகத்தில் அமைந்திருக்கும் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில், இளைய தலைமுறையினரோடு உணர்வாளர்களும் மக்களும் என நூற்றுக்கணக்கானோர் இணைந்து தமிழீழத் தேசியக் கொடிகளையும் பதாதைகளையும் தாங்கியவாறு ஐ.நா வளாகம் அதிர கொட்டொலிகளை எழுப்பி, வேற்றினத்தவரின் அதிக கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அரசியற்பிரிவினராலும், சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பாலும் ஐ.நா மன்றத்தின் இலங்கையின் மனித உரிமையை கண்காணிக்கும் உறுப்பினர்களிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. அவர்களுடன் தொடர்ந்து 30 நிமிடங்கள் வரை, இன்னும் தாயகத்திலும் மற்றும், தாயகம் திரும்பும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை பற்றியும் பேசப்பட்டது. அத்துடன் தாங்கள் தொடர்ந்தும் இலங்கையில் நடந்து வரும் மனித உரிமை மீறலுக்கு எதிராக குரல் கொடுப்பதாகவும் கூறியிருந்தனர். அது மட்டும் இன்றி அவர்கள் எம்மை தொடர்ந்து நாங்கள் வாழுகின்ற நாடுகளில் அதிக மக்களைத் திரட்டி எமது உரிமைக்கான குரல்களை எழுப்புமாறும், மற்றும் அந்த நாட்டு வெளிவிகார அமைச்சர்களிடம் தொடர்புகளைப் பேணுமாறும் கேட்டுக்கொண்டனர். ஐநா முன்றலில் எம்மால் இன்று ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர், தொடர்ந்தும் எம்மை எமக்கு நடந்த அநீதிக்கு எதிராக குரல்கொடுக்குமாறும் கூறியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து முருகதாசன் திடலில் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. முதலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, பின்னர் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது. தமிழீழத்தேசியக்கொடியை தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளையின் பொறுப்பாளர் திரு.ரகுராம் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து ஈகைப்பேரொளிகளுக்கான திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதோடு, மலர்மாலைகளும் அணிவிக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து அகவணக்கம் மற்றும் உறுதிமொழி இடம்பெற்றது. உறுதிமொழி இடம்பெறும் போது அனைத்துலக ரீதியில் கலந்து கொண்ட தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் மேடையில் உணர்வோடு பங்கெடுக்க, ஏனைய தமிழ் மக்கள் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் படத்தையும் தமிழீழத் தேசியக்கொடியையும் கையில் ஏந்தியவாறு எழுச்சியுடன் உறுதிமொழி எடுத்தனர். சிறப்புரையினை அனைத்துலகத் தொடர்பக நிர்வாக பொறுப்பாளர் திரு. தினேஷ் அவர்கள் ஆற்றியிருந்தார். அதில், தற்பொழுது புலம்பெயர் தேசங்களில் இருக்கும் கட்டமைப்புக்களைச் சீர்குலையச்செய்யும் வழியில் நடந்துவரும் போலி பிரச்சாரங்கள் பற்றியும், முக்கியமாக சுவிஸ் நாட்டில், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவிற்கு எதிராக நடந்துவரும் பிரச்சாரங்கள் பற்றியும் தெளிவூட்டல் ஒன்றை வழங்கியிருந்தார். தொடர்ந்து அனைத்துலக ரீதியில் கலந்து கொண்ட தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்களாலும், சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்களாலும் ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன் மற்றும் இத்தாலி மொழிகளிலும் உரைகள் வழங்கப்பட்டன.
ஈகை பேரொளி முருகதாசன் திடல், உணர்வெளுச்சி பொங்கும் வண்ணம், பிரித்தானியா கலை பண்பட்டுக் குழுவின் தலைமையில் வருகை தந்த இளம் சிறுமிகள் எழுச்சி நடனம் ஒன்றினை வழங்கி இருந்தனர். இறுதி நிகழ்வாக பிரகடனம் வாசிக்கபட்டதனைத் தொடர்ந்து, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற உரமேற்றும் பாடல் இசைக்கப்பட்டு, அதன் பின்னர் தமிழீழத் தேசியக்கொடி கையேற்றலுடன் இக் கவனயீர்ப்பு போராட்டமானது பேரெழுச்சியுடன் நிறைவுபெற்றது.
சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பால் வேற்றின மக்களுக்கான துண்டுப்பிரசுரம் திடலில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எங்கள் தாயகமாகிய தமிழீழதேசம் விடுதலை அடையும்வரை எத்தடைவரினும் அத்தடைதகர்த்து, மாவீரர்கள் காட்டிய பாதையில் அவர்கள் ஈகங்கள் வழிநின்று, தமிழீழத் தேசியத் தலைவரின் வழிகாட்டலில் தொடர்ந்தும் போராடுவோமென அறிவிப்பாளரின் உணர்வின் வரிகளோடு உறுதியெடுத்து தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற உரத்த பேரொலியோடு இப் போராட்டம் நிறைவுபெற்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தின் ஒருங்கிணைப்பில், தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இம்மாபெரும் போராட்டமானது, இனவெறி சிறிலங்கா அரசிற்கும்,எம்மை சதி செய்து அழிக்க நினைக்கும் பிராந்திய சக்திக்கும், சர்வதேசத்திற்கும் மற்றும் ஏனைய கட்டமைப்புகளுக்கும் ஒரு செய்தியை சொல்லி நிற்பதோடு, தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப்போராட்டம் உணர்வோடு கொண்டு செல்லப்படும் என்பதை கட்டியம் கூறிநிற்கின்றது.






