
நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில், கிளிநொச்சி மாவட்டத்தின் நாற்பது வட்டாரங்களையும் வென்று கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று சபைகளிலும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியே ஆட்சியமைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இன்றையதினம், கிளிநொச்சி பசுமைப்பூங்கா வளாகத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்போடு நடைபெற்ற இறுதிப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அடக்குமுறைக்கு எதிராகப் போராடுகின்ற எங்களின் அடையாளங்களை பாதுகாக்க வேண்டுமாயின் உள்ளூர் அதிகாரங்களைத் தீர்மானிக்கிற சக்திகளாக நாங்களே இருக்க வேண்டும். ஆட்சிபீடம் ஏறி ஆறுமாதங்கள் கடந்தும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த எந்தச் சமிக்ஞைகளும் அரச தரப்பிலிருந்து எழவேயில்லை என்றபோதும் ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர அர்சியல்தீர்வு குறித்து இந்த அரசோடு பேசுவதற்கும் நாம் தயாராகவே உள்ளோம் – என்றார்.
கிளிநொச்சி நகர வர்த்தகர் சங்கத் தலைவர் இளையதம்பி விஜயசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் செல்வராணி சோமசேகரம்பிள்ளை, வடக்கு மாகாண மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, மேனாள் தவிசாளர்களான அருணாசலம் வேழமாலிகிதன், சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன், சுப்பிரமணியம் சுரேன், கட்சியின் பூநகரி பிரதேச அமைப்பாளர் தனபாலன் குவேந்திரன், வேட்பாளர்களான ஜெலானி தர்மராசா, ஷாலினி சாருகன் ஆகியோர் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.