
சுற்றுலா பங்களாதேஷ் 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணிக்கும், இலங்கை 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணிக்கும் இடையில் நேற்று (03) நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் வீரர்கள் 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
இந்த வெற்றியுடன் இதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் 19 வயதின்கீழ் அணி தற்போது தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
கொழும்பு CCC கழக மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் 19 வயதின்கீழ் அணியின் தலைவர் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார், அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 336 ஓட்டங்களைப் பெற்றது.
அந்த இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சவாத் அப்ரார் மாறினார். அவர் 115 பந்துகளில் 14 பௌண்டறிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 113 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டித் தொடரில் இது அவரது இரண்டாவது சதமாகும். அவரைத் தவிர, ரிசான் ஹொசன் 77 பந்துகளில் 5 பௌண்டறிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 82 ஓட்டங்களையும், எம்.டி. அப்துல்லா 27 பந்துகளில் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் ரசித் நிம்சர 96 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே நேரத்தில் முதல் இளையோர் ஒருநாள் போட்டியில் ஆடிய வலது கை சுழல்பந்து வீச்சாளர் தருஷ நவோத்ய 2 விக்கெட்டுகளையும், சனுஜ நிந்துவர ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
- 2ஆவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் இளையோரிடம் வீழ்ந்தது இலங்கை
- பங்களாதேஷ் இளையோரிடம் மீண்டும் வீழ்ந்தது இலங்கை
இதனையடுத்து 337 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்க நோக்கி களமிறங்கிய இலங்கை 19 வயதின்கீழ் அணி, 38.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் விமத் தின்சர 72 பந்துகளில் 8 பௌண்டறிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 66 ஓட்டங்களையும், ரசித் நிம்சர 29 பந்துகளில் 5 பௌண்டறிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 39 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் அல் ஃபஹத் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், அஸீசுல் ஹக்கீம் மற்றும் சஞ்சித் மொசும்தர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இரு அணிகளுக்குமிடையிலான 5ஆவது ஒருநாள் போட்டி நாளை (05) கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவுள்ளது.