
International Network சர்வதேச வலையமைப்பு
Melbourne, Australia மெல்பன், அவுஸ்திரேலியா
இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள் அமைப்பு (WTSL)
ஊடக அறிக்கை – 9 .05. 2025
தமிழ்த் தேசியக் கட்சிகளின் அடுத்த முக்கிய பணி, முழுமையாகச் செயற்படவல்ல மாகாணசபை முறைமைக்கு உழைப்பதாகும்.
சமீபத்திய உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் வடக்கு கிழக்கு மக்கள் சுயநிர்ணய உரிமை, அதிகாரப் பகிர்வு, பங்கேற்பு ஜனநாயகம், மற்றும் நிலையான வளர்ச்சியை ஆதரிக்கும் அரசியல் பாதையை விரும்புகின்றனர் என்பதை உறுதிப்படுத்துகிறது. இதில் தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றியானது, உள்ளூராட்சி சபைகளுக்கு அப்பால் மாகாணசபைகள் பற்றிய அவர்கள் கடப்பாடுகளுக்கும் தீவிர செயல் ஊட்டம் கொடுக்க அழைப்பு விடுகிறது.
அரசியல் அனுபவம், தெளிந்த நோக்கு, மற்றும் மக்களின் நாளாந்த நலனுக்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயற்படக் கூடிய அனைவரும், புரிந்துணர்வுடன் இதில் இணைந்து பயணிப்பது காலத்தின் அவசியமாகும்.
விரைவான மாகாண சபைத் தேர்தல்கள் நீண்ட காலமாக வஞ்சிக்கப்பட்டு வந்த வடக்கு மற்றும் கிழக்கில் அரசியல் ஸ்திரத்தன்மையையும், பொருளாதார மறுமலர்ச்சியையும் தோற்றும் மீள் ஆரம்பமாக அமையும். பல்வேறு தமிழ் அமைப்புகள் மற்றும் பரந்த சமூகங்கள் இந்த முயற்சியில் இணைந்து செயல்படுவதன் மூலம், தமிழர் அரசியல் தலைமைத்துவத்தில் ஒற்றுமையை உருவாக்கவும், நமது கூட்டு எதிர்காலத்தைக் காக்கவும் ஒரு முக்கிய பயணமாக இதை மாற்றமுடியும்.
தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பாக வெவ்வேறு நிலைப்பாடுகள் இருப்பினும், உடனடி குறைந்தபட்ச கோரிக்கையாக 13வது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படல் வேண்டும் என ஒற்றுமையாக ஒரே குரலில் முன்வைப்பது இறுதி இலக்கான சமஷ்டித் தீர்வை அடைவதற்கு முன்னதான ஓர் இடைக்காலத் தீர்வுக்கு வழிவகுக்கும்.
மேலும், 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும், மாகாண சபைகள் வழியாக நேர்த்தியான ஆட்சி மற்றும் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்துடனும், மற்றும் பிற கட்சிகளுடனும் அர்த்தமுள்ள உரையாடல்களும், நேர்மையான பரஸ்பர பங்களிப்பும் அவசியம் என்பதை நாமனைவரும் அறிவோம். நடந்து முடிந்த தேர்தலில் அதிகளவு வாக்குகளைப்பெற்ற கட்சி என்ற வகையில், மாகாணசபைகளை ஊழலின்றி திறம்பட நடத்தும் ஆளுமை, அனுபவம், மற்றும் தென்னிலங்கைக் கட்சியினருடன் தெளிந்த தொடர்பாடல்களை மேற்கொள்ளும் மொழிப்புலமை கொண்டவர்களின் துணையுடன், ஏனைய தமிழ்த் தேசியக்
கட்சிகளுடனும் கலந்தாலோசித்து, இக்கூட்டுப் பணியை முன்னெடுத்துச் செல்ல தமிழரசுக் கட்சி முன்வர வேண்டுமென நாம் விரும்புகிறோம்.
ஈற்றில், 13வது திருத்தம் அரசியல் யாப்பின் ஒரு அங்கமாக இருந்தபோதிலும், அதை முழுமையாக அமுல்படுத்தல் எனும் விடயம் ஸ்ரீ லங்காவிலுள்ள அனைத்து சமூகத்தினரது ஒத்துழைப்புடன்தான் சாத்தியமாகும் என்பதைப் புரிந்துகொண்டு, ஒற்றுமையான தமிழ்த் தரப்பு சிங்கள, முஸ்லீம், மலையக மக்களின் பிரதிநிதிகளையும் அணுகி, அவர்களையும் அதிகாரப் பகிர்வுக்கான முயற்சிகளுடன் இணைத்து முன்செல்ல, தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, அனைத்து தலைவர்களையும் இலங்கை வாழ் தமிழர் நலன் விரும்பிகள் அமைப்பு பணிவுடன் வேண்டுகிறது.
நன்றி.
ராஜ் சிவநாதன்
சர்வதேச ஒருங்கிணைப்பாளர்
இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள்
மெல்பன், அவுஸ்திரேலியா
Email: rajasivanathan@gmail.com phone: +61412067019