
ஏழு வயது குழந்தையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்கத்திடமிருந்து வழங்கப்படும் நிதியுதவியைப் பெறுவதற்கு தேவையான அனுமதியை வழங்குவதற்காக, குழந்தையின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அத்துடன் குற்றவாளியின் வாக்குரிமை உட்பட சிவில் உரிமைகள் ரத்து செய்யப்படுவதாகவும், இதனை தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், 20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை வழங்கிய நீதிபதி, அரச உத்தியோகத்தராக இருந்து கொண்டு, இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரியது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார்.
2015 மார்ச் 31 அன்று, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட தனது ஏழு வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய அரசாங்கத்தின் நிதியுதவியைப் பெறுவதற்கு அனுமதி வழங்குவதற்காக, குழந்தையின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரி, அவரை திஸ்ஸமஹாராம பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றபோது, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.