
“தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம், அந்தப் பயங்கர நிகழ்வைப் பற்றிய சிந்தனையையும், பொதுமக்களுக்கு அதைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குமான ஒரு முக்கிய சந்தர்ப்பமாக அமைந்துள்ளது” என ஒன்டாறியோ மாநில சுகாதார அமைச்சின் உளநலத்துறை இணை அமைச்சரும், ஸ்கார்பரோ–ரூஜ் பார்க் தொகுதியைச் சேர்ந்த மாநில சட்டமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.
தமிழ் இனப்படுகொலை வாரம் குறித்து தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், தொடர்ந்தும் கூறியதாவது:
“இந்த வாரம், ‘தமிழ் இனப்படுகொலை கல்வி வாரமாக’ ஒன்டாறியோ மாநிலத்தில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வாரத்தின் பின்னணியில், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்டம் அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாரம் முழுவதும் தமிழ்ச் சமூகத்தினரும் இளைஞர்களும், தமிழ் இனப்படுகொலையின் போது உயிர் பிழைத்தவர்களின் கதைகளை பகிர்ந்து கொள்வார்கள். மேலும், அந்தச் சம்பவங்கள் எவ்வாறு தலைமுறைகளுக்கு இடையில் மனஉளைச்சலை ஏற்படுத்துகின்றன என்பது பற்றியும் பொதுமக்கள் அறிந்து கொள்வார்கள்.”
“இனப்படுகொலை என்பது ஒரு நிகழ்வால் மட்டும் வரையறுக்கப்பட முடியாது. அது ஒரு திட்டமிட்ட செயல்முறை. ஒரு மக்களுக்கே எதிராக அரசு அதிகாரபூர்வமாக மேற்கொள்ளும் தொடர்ச்சியான அழிவின் வடிவமே இனப்படுகொலை.”
“மே 2009ம் ஆண்டு, தமிழ் இனப்படுகொலையின் உச்சநிலை என்று குறிப்பிடப்படும். முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு உணவும் மருந்தும் மறுக்கப்பட்டதுடன், பாலியல் வன்முறைகள், கொலைகள், கடத்தல்கள் மற்றும் கொத்துக் குண்டுகளால் ஏற்பட்ட துயர நினைவுகள் இன்றும் நம்முடன் உள்ளன.”
“தமிழர் இனப்படுகொலை இன்னமும் முடிவடையவில்லை. இன்று வரை 167,796 தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தெளிவான தகவல் கிடைக்கவில்லை. தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்தை அங்கீகரிப்பதன் மூலம், தொடரும் இந்தக் குற்றச்செயல் குறித்து மக்கள் சிந்திக்கவும், விழிப்புணர்வை உருவாக்கவும் வழிவகுக்கும்.”

Alle Reaktionen:
11