இழந்த இழப்புகளின் வலியைச் சுமந்து, நீண்ட காலமாக நாம் நீதிக்காக உயிருள்ள சாட்சிகளாகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். குறிப்பாக வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கோரிய போராட்டம் மிகவும் வலிமையானதொரு மனித உரிமைப் போராட்டமாகத் தொடர்கிறது.
ஆனாலும், நீதிக்காக போராடும் இந்த சமூகத்திற்காக குரல் கொடுக்க பலர் இன்னும் தயங்குகின்றனர். அற்ப சுகபோக வாழ்க்கை, தனிப்பட்ட சலுகைகள் போன்ற காரணங்களுக்காக போராட்டத்தின் உண்மை, நேர்மை, நியாயம் மற்றும் அர்ப்பணிப்பு போன்ற அடிப்படை மதிப்புகள் பல இடங்களில் மூடி மறைக்கப்படுகின்றன.
இதற்கு சர்வதேச நாடுகளும், தங்களை மனிதாபிமான அமைப்புகள் எனக் கூறிக் கொள்ளும் சில சர்வதேச தொண்டு நிறுவனங்களும் மறைமுகமாக துணைபோவதாகவே காணப்படுகிறது. இதன் விளைவாக, நீதி தொடர்ந்து மறுக்கப்படும் சமூகமாகவே நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலத்தில், இறைமையுள்ள ஒரு நாட்டின் தேசிய இராணுவமாகிய அரசுப் படையினரிடமே எமது உறவுகள் தங்கள் அன்புக்குரியவர்களை ஒப்படைத்தனர். ஆனால் 17 ஆண்டுகள் கடந்தும் அவர்கள் குறித்து எந்தத் தெளிவான பதிலும் வழங்கப்படவில்லை. இதுவே பாதிக்கப்பட்ட குடும்பங்களை சர்வதேசத்தை நாடும் நிலைக்கு தள்ளியுள்ளது.
இருப்பினும், பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை உள்ளக பொறிமுறைகளுக்கு அப்பால் நகர்த்துவதில் நாம் இன்னும் போதுமான முன்னேற்றத்தை அடையவில்லை என்பதே உண்மை.
நாம் “சர்வதேசம்” எனக் குறிப்பிடுபவர்கள் யார் என்பதைப் பார்ப்போமானால், அவை சர்வதேச நாடுகளும் சர்வதேச தொண்டு நிறுவனங்களுமாகும். இவ்வமைப்புகள் தங்களை மனிதாபிமான அல்லது நடுநிலையான அமைப்புகள் எனக் கூறிக்கொண்டாலும், இலங்கையில் தொடர்ந்து செயற்பட வேண்டுமெனில், இலங்கை அரசின் கொள்கை மற்றும் சட்ட வரம்புகளுக்குள் தான் இயங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
எனவே, அவர்கள் நேரடியாக எமக்கான நீதி, நியாயங்களைப் பெற்றுத்தருவார்கள் என்று முழுமையாக எதிர்பார்க்க முடியாது. அதேவேளை, நாம் மௌனமாகவும் இருக்க முடியாது.
தொடர்ச்சியான இன அழிப்புக்குட்பட்ட இனமாகிய நாம், எமக்கென உள்ள கொள்கை மற்றும் அடிப்படை நிலைப்பாடுகளை உறுதியாகப் பின்பற்ற வேண்டும். எந்த நிலையிலும் விட்டுக்கொடுப்புகளுக்கு இடமின்றி, நீதிக்கான தொடர்ச்சியான அழுத்தங்களை ஏற்படுத்துவது எமது பொறுப்பாகும்.
அதேநேரம், எமது நீதி மறுக்கப்படும் இடங்களிலேயே சென்று எமது குரலை பதிவு செய்ய வேண்டிய அவசியமும் உருவாகியுள்ளது. சர்வதேச நாடுகளின் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் வாசல்கள் தட்டப்பட வேண்டும்.
எங்களுக்காக யாரும் தாமாக முன்வந்து எங்களைத் தேடி வந்து தீர்வைத் தர வரமாட்டார்கள். அப்படியிருந்தால், இறுதி யுத்தம் இவ்வளவு மோசமான இனப்படுகொலைகளுடன் முடிவடைந்திருக்காது.
எனவே, எமக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனில், எமது போராட்டங்களை சரியான திட்டமிடல்களுடனும் தூரநோக்குடனும் முன்னெடுக்க வேண்டும்.
அங்கீகாரங்கள் சிலவேளைகளில் அரசியல் ரீதியாகவும் அதிகாரபூர்வமாகவும் உருவாக்கப்படுகின்றன. அதேவேளை, எமது நீதி, நியாயம், தியாகம் மற்றும் அர்ப்பணிப்புகளின் அடிப்படையில் தொடர்ச்சியான அழுத்தங்களை உருவாக்குவதன் மூலமும் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
நீதிக்காக உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது உறவுகளின் போராட்ட வடிவங்களை மாற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அதனடிப்படையில், சர்வதேசத்தின் வாசல்கள் அமைந்துள்ள இடங்களுக்குச் சென்று எமது நிலைப்பாடுகளை நேரடியாக எடுத்துரைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
அண்மையில் நான் சந்தித்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் நிலைப்பாடுகள் கூட, இந்த உண்மையை மேலும் தெளிவுபடுத்தியுள்ள ன.
மனித உரிமைச் செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதன்.
