இந்திய ரயில்வேயில், பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் முதல்முறையாக மனித வடிவிலான ரோபோட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு சிறப்பான பயணத்தை வழங்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், முதல் மனித வடிவிலான ரோபோட்டை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இந்த ASC அர்ஜுன்(ASC Arjun) என்ற முதல் மனித வடிவிலான ரோபோட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில்வே பாதுகாப்புப் படையின் (RPF) கீழ் இயங்க உள்ள இந்த ரோபோட், ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான உதவியை மேம்படுத்துவதோடு, பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ரயில்வே மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் வழிகாட்டுதலின் கீழ் ஆர்.பி.எஃப் குழு ஒரு வருடத்திற்கும் மேலாக, விசாகபட்டினத்தில் வைத்து இந்த ரோபோட்டை உருவாக்கியுள்ளனர்.
இந்த ரோபோட், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு, முகம் அடையாளம் காணும் திறன், இணைய இணைப்பு (IoT) மற்றும் நிகழ்நேர கண்காணிப்பு திறன்களைக் கொண்டுள்ளது.
இந்த முகம் அடையாளம் காணும் அமைப்பைப் பயன்படுத்தி, ஊடுருவலை கண்டறிந்து உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு எச்சரிக்கை வழங்குகிறது.
ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் அவ்வப்போது பயணிகளுக்கு தேவையான அறிவிப்புகளை வழங்க உள்ளது.
இந்த ரோபோட்,ஏ.ஐ. அடிப்படையிலான பயணிகள் கூட்ட நெரிசலை ஆய்வு செய்து, கூட்ட நெரிசல்களில் பயணிகளுக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்குவதோடு, கூட்ட நெரிசல் குறித்து அதிகாரிகளுக்கும் உரிய எச்சரிக்கை வழங்குகிறது.
மேலும், ஆரம்பத்திலே தீ மற்றும் புகை ஆகியவற்றை கண்டறிந்து பயணிகள் மற்றும் பாதுக்காப்பு பிரிவினருக்கு உடனடி எச்சரிக்கை வழங்குகிறது.
