திருகோணமலை ஐந்து மாணவர்களின் படுகொலை உண்மைகளை வெளியிட்ட இளம் ஊடகவியலாளர் சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 20 ஆண்டுகள்!
இன்று ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் சுட்டுக் கொல்லப்பட்டு 20 ஆண்டுகள்நிறைவடைந்துள்ளன. ஐந்து மாணவர்களின் படுகொலை தொடர்பான உண்மைகளை ஆதாரங்களுடன் பதிவு செய்து எழுதி வந்த ஒரு துணிச்சலான ஊடகவியலாளர் அவர். அந்தக் கொலைகள் நடைபெற்ற வெறும் 20 நாட்களுக்குள் அவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியிருந்தார் என்பதே இந்தக் கொலையின் கொடூரத்தை இன்னும் தீவிரமாக வெளிப்படுத்துகிறது எனமக்கள் போராட்ட முன்னணியின் முக்கியஸ்தர் ராஜ்குமார் ராஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் இன்று (24.01.2026) அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
24.01.2006 எனது வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் ஒருவர் சுடப்பட்டிருக்கிறார் என்ற தகவல் தொலைபேசி மூலம் கிடைத்தது. அந்த அழைப்பை எடுத்தவர், என்னை பயிற்சி ஊடகவியலாளராக இணைத்துக் கொண்டிருந்த ஒருவர். தகவலைக் கேட்டவுடனே எந்த யோசனையும் இன்றி அந்த இடத்தை நோக்கி ஓடினேன்.
அங்கு நான் கண்ட காட்சி என் மனதில் இன்னும் அழியாத காயமாகப் பதிந்துள்ளது. சுகிர்தராஜன் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரது வயிற்றுப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது. அருகில் சென்று பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்பதை உணர முடிந்தது. இந்தச் சம்பவம் உவர்மலைச் சிறுவர் மைதானத்துக்கு முன்பாக இடம்பெற்றிருந்தது.
அந்த இடத்தில் நிலவிய அழுகுரலும், கலங்கிய முகங்களும் இன்னும் நினைவில் ஒலிக்கின்றன. அவரது மனைவி, உறவினர்கள் கதறி அழுது கொண்டிருந்தார்கள். அவர்களின் துயரம், அந்தக் காலை நேரத்தின் அமைதியை கிழித்து நொறுக்கியது. அந்த ஒரு தருணத்தில் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையே முற்றாகச் சிதைந்துவிட்டது.
பல சந்தர்ப்பங்களில் அவர் என்னோடு பேசிப் பழகியவர். மிகுந்த தைரியமும், நேர்மையும் கொண்ட ஊடகவியலாளர். பயமின்றி உண்மையை எழுத வேண்டும் என்ற உறுதி அவரது வார்த்தைகளிலும், செயல்களிலும் தெளிவாகப் பிரதிபலித்தது. அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் எதுவும் அவரை மௌனமாக்க முடியவில்லை.
அவர் இறந்த போது அவருக்கு வயது 36 மட்டுமே. ஒரு ஊடகவியலாளராக இன்னும் பல உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டிய காலத்தில் அவரது குரல் நிரந்தரமாக அடக்கப்பட்டது. ஆனால், அவரது மரணம் ஒரு மனிதனின் முடிவாக மட்டும் இல்லை; அது உண்மையை எழுதும் உரிமைக்கு எதிரான ஒரு கொடூரமான எச்சரிக்கையாகவும் இருந்தது.
20 ஆண்டுகள் கடந்தும் சுகிர்தராஜனின் பெயர் மறக்கப்படவில்லை. அவர் எழுதிய உண்மைகளும், அவர் காட்டிய தைரியமும் இன்னும் பலரின் நினைவிலும், மனச்சாட்சியிலும் உயிருடன் இருக்கின்றன. ஒரு ஊடகவியலாளன் உயிர்த் தியாகம் செய்த உண்மை காலம் கடந்தும் கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கிறது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
