தாரகி அல்லது தராக்கி என்று பரவலாக அறியப்பட்ட மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் அவர்களின் துணிகரமான பத்திரிகைச் செயற்பாட்டுக்காக பிரித்தானியாவில் அவருக்கு வரதகுமார் நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது.
மாமனிதர் சிவராமின் ஆழமான பகுப்பாய்வுக்கும், தாயகத்தின் நெருக்கடியான போர்ச் சூழலில் அவர் செயலாற்றிய வீரத்துக்குத் தலைவணங்கியும் இலங்கையில் நடந்தேறும் அரச ஒடுக்குமுறையை உலகுக்கு அம்பலப்படுத்திய செயற்பாட்டுக்குமாக வரதகுமார் நினைவு விருது இலண்டனில் 2025 டிசம்பர் 13 ஆம் நாள் சனியன்று வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு உபகரணங்கள்
1979 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து முதலில் தமிழ்நாட்டை மையமாகக் கொண்டும் பின்னர் பிரித்தானியாவை மையமாகக் கொண்டும் ஈழத்தமிழர் அரசியல், மரபியல், மனித உரிமை ஆகிய விடயதானங்களை தரவுப்படுத்துவதில் தமிழ் தகவல் நடுவம் (Tamil Information Centre, TIC) என்ற அமைப்பு தொடர்ச்சியாக இயங்கிவருகிறது.
யாழ்ப்பாணத்தில் இருந்து ஈழத்தமிழரிடையே சுதந்திரன் என்ற பத்திரிகை இயங்கியதற்குச் சமாந்தரமாக, ஆனால் கட்சிசார்பற்ற சுயாதீன ஆங்கில வாராந்தப் பத்திரிகையாக சற்றர்டே றிவியூ இயங்கிவந்தபோது அதன் ஆசிரியராக மறைந்த மூத்த பத்திரிகையாசிரியான எஸ். சிவநாயகம் பணியாற்றியிருந்தார். அவர் தமிழ் தகவல் நடுவத்தில் இணைந்து பிற்காலத்தில் காத்திரமான தரவுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டிருந்த போது அவரோடு நெருக்கமாகப் பணியாற்றிய வைரமுத்து வரதகுமார் (1949-2019) நடுவத்தின் பணிகளை அதன் முழுநேரச் செயற்பாட்டாளராகவும் வாழ்நாட் செயற்பாட்டளராகவும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவந்தார்.
அத்தகைய பாரம்பரியம் கொண்ட தமிழ் தகவல் நடுவத்தால் ஆண்டுதோறும் மனித உரிமை நாளை ஒட்டி வரதகுமார் நினைவு விருது வழங்கப்பட்டுவருகிறது.
பிரித்தானியாவில் இருந்து இயங்கும் அந்நாட்டைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரான போல் ஹெரன் என்பவருக்கும் இரண்டாம் தலை முறை ஈழத்தமிழர் வழக்கறிஞையான சாந்தி சிவகுமாரனுக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை விருது வழங்கப்பட்டது.
பிரித்தானியாவில் ஈழத்தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட இலங்கைத் தூதரலாயத்தில் கடமையாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவருக்கெதிரான சட்ட நடவடிக்கை உள்ளடங்கலாக பல சட்ட நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டிருந்தமைக்கான அங்கீகாரமாக மனித உரிமை விருதுகள் வழங்கப்பட்டன.
மாமனிதர் சிவராமுக்கான சிறப்பு விருதை அவரின் மனைவி பிள்ளைகளிடம் சேர்க்கும் முகமாக தமிழ்நெட் ஆங்கில ஊடகத்தின் நிறுவக ஆசிரியரும் சிவராமின் நெருங்கிய ஊடக நண்பருமான ஜெயா கோபிநாத் (நோர்வே) பெற்றுக்கொண்டு சுருக்கமான நினைவுரை ஒன்றையும் நிகழ்வில் வழங்கியிருந்தார்.
தனது உரையின் போது மாமனிதர் சிவராமின் துணைவியாரும் அவர்களது மகனும் இரு மகள்மாரும் இந்த விருது வழங்கிய நிகழ்வைக் காணும் போது தமிழினம் மாமனிதர் சிவராமின் மீது நன்றியறிதலோடு இருப்பதைக் குறிப்பெடுத்துக்கொள்வார்கள் என்று தெரிவித்தார். சிவராம் தான் வாழ்ந்த காலத்தில் தனது வாழ்க்கையில் இனி எந்த அங்கீகாரமும் ஒரு விடயத்தை விட பெரிதாக அமையாது என்று தனக்குக் கூறியிருந்ததாகத் தெரிவித்த ஜெயா, அந்தச் சம்பவத்தையும் அங்கு விவரித்தார்.
2004 நவம்பர் மாவீரர் நாளை ஒட்டிய நாட்களில் தேசியத்தலைவர் சிவராமை அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களோடும் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களோடும் சந்தித்தபோது தலைவர் பிரபா சிவராமின் கைகளைத் தனது இரண்டு கைகளாலும் இறுகப்பற்றி கொழும்பில் இருக்கவேண்டாம் என்றும் தற்காலிகமாக ஆதல் வெளிநாட்டில் தங்கியிருக்குமாறும் கண்கள் பனிக்க வேண்டிக்கொண்டார் என்றும் அதைவிடத் தனக்குப் பெரிய அங்கீகாரம் வேறு எதுவும் வாழ்க்கையில் தேவையில்லை என்று சிவராம் தனக்குப் பெருமையோடு தெரிவித்திருந்ததாகவும் ஜெயா அங்கு குறிப்பிட்டு, சிவராமின் குடும்பத்தினர் சார்பாக அந்த விருதுக்கான ஏற்புரையை வழங்கினார்.
