யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், எந்திரவியல் மாமேதையுமான பேராசிரியர் அழகையா துரைராஜா ஞாபகார்த்த நினைவுப் பேருரை நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை, பிற்பகல் 3:00 மணிக்கு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.
பல்கலைக்கழக பட்டமளிப்பு வைபவ நிகழ்வுகளின் தொடர்ச்சியாக நடாத்தப்படும் நினைவுப் பேருரைகளின் வரிசையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில், வவுனியா பல்கலைக்கழகத் துணைவேந்தரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் மின்னியல் மற்றும் இலத்திரனியல் சிரேஷ்ட பேராசிரியருமான அருளம்பலம் அற்புதராஜா, “தொலைநோக்கிலிருந்து நனவாக்கம் வரை – நிலையான வளர்ச்சியை அடைவதற்கான திட்டமிடல் மற்றும் செயலாக்க உத்திகள் (From Vision to Reality: Planning and Implementation Techniques for Achieving the Sustainable Development) என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார்.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக சமூகத்தினர், மாணவர்கள், கல்வியியலாளர்கள், துறைசார் நிபுணர்கள், பழைய மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பல்கலைக்கழகத் துணைவேந்தர் அழைப்பு விடுத்துள்ளார்.
