இரத்தக் கண்ணீர் வடிக்கும் சகோதரிகளின் அவலக் குரல்!
போர் ஓய்ந்துவிட்டது என்றார்கள். ஆனால் இன்று ஈழத்து மண்ணில் எமது சகோதரிகளின் வாழ்வில் நடக்கும் கொடூரங்களைப் பார்க்கும்போது, போர்க்காலத்தை விடவும் கொடியதொரு இருண்ட யுகத்தில் நாம் வாழ்கிறோமோ என்ற அச்சம் நெஞ்சை உலுக்குகிறது!
பேரிழப்புகளையும் வலிகளையும் சுமந்து நின்ற கிளிநொச்சி மண்ணில், வயோதிபத் தந்தையைத் தாக்கி கட்டிப்போட்டுவிட்டு, ஏழு மிருகங்கள் சேர்ந்து ஒரு யுவதியைச் சீரழித்த சம்பவம் மனித குலத்திற்கே ஏற்பட்ட மாபெரும் அவமானம்! அந்த அதிர்ச்சிக்கு முன்னதாகவே , உருத்திரபுரத்தில் மற்றுமொரு இளம் உயிரின் மரணம்! அதற்கும் எந்த நீதியும் இல்லை.
அதே போன்றே தற்கொலை என மூடிமறைக்கப் பட்ட யாழ். புன்னாலைக்கட்டுவனில் எரிந்த இரட்டை மாணவிகளின் மரணமும் ஒரு திட்டமிட்ட கொலையே என அவர்களது குடும்பத்தினர் இன்று வெளியிட்டுள்ள செய்தி நெஞ்சை உலுக்குவது.
இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எமது மண்ணில் பெண் பிள்ளைகளுக்கு எதிரான வன்முறைகளும், மர்ம மரணங்களும் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.
போதைப்பொருள் கலாச்சாரமும், மூலைக்கு மூலை முளைத்திருக்கும் மதுபானசாலைகளும் எமது இளைய தலைமுறையைச் சீரழித்து, மிருகங்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. பண்பாட்டையும், ஒழுக்கத்தையும், வீரத்தையும் போற்றி வாழ்ந்த ஒரு சமூகம், இன்று போதையின் பிடியில் சிக்கித் தனது சொந்தச் சகோதரிகளுக்கே எமனாக மாறியிருப்பது எவ்வளவு பெரிய சாபக்கேடு!
கண்முன்னே எமது இளைய சமுதாயம் அழிவதையும், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதையும் பார்த்துக்கொண்டு, நாம் ஏன் இன்னும் வாய்மூடி மௌனிகளாக இருக்கிறோம்?
ஓட்டு அரசியல் வாதிகளும், நலன்பேண் அமைப்புகளும் எங்கே தூங்குகின்றன.??
மக்கள் ஏன் இன்னும் வீதியில் இறங்கவில்லை? இந்த மௌனத்தின் மர்மம் என்ன?
பயமா? சுயநலமா? அல்லது “எமக்கென்ன” என்ற அலட்சியமா?
மதுபானசாலைகளுக்கும், போதை மாஃபியாக்களுக்கும் எதிராக மக்கள் சக்தி திரண்டு எழாத வரை, இந்தக் கொடூரங்களுக்கு ஒருபோதும் முற்றுப்புள்ளி வைக்க முடியாது. இன்று அடுத்த வீட்டுப் பெண்ணுக்கு நடந்த கொடுமை, நாளை நம் எல்லோர் வீட்டு வாசலையும் தட்டும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
போதும் இந்த மௌனம்! எமது மண்ணையும், எமது சகோதரிகளையும், எமது எதிர்காலத் தலைமுறையையும் காப்பாற்ற போதைக்கும், மதுவுக்கும் எதிராக ஒட்டுமொத்த சமூகமும் ஓரணியில் திரண்டு போராட வேண்டிய தருணம் இது!
வேடிக்கை பார்த்தால், வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்காது!
Weniger anzeigen
