கே. எஸ். பாலச்சந்திரன் என்று அறியப்படும் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன்
(10 சூலை 1944 – 26 பெப்ரவரி 2014)

ஈழத்தின் அறியப்பெற்ற பல்துறைக் கலைஞர். நகைச்சுவை, வானொலி, நாடகம், நடிப்பு, திரைப்படம், தொலைக்காட்சி, எழுத்து எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.
ஈழத்து கலைத்துறைகளில் நெடுங்காலம் செயற்பட்ட இவர், பின்னர் கனடாவிற்கு குடிபெயர்ந்து தொடர்ந்து இயங்கி வந்தார்.
யாழ்ப்பாண மாவட்டம், கரவெட்டியில் பாலச்சந்திரன் பிறந்தார். இவர் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும், யாழ் மத்திய கல்லூரியிலும் கல்வி கற்றார்.
இளமைக் காலத்தில் உதைப்பந்தாட்டம், துடுப்பாட்டம், இறகுப்பந்தாட்டம் உட்பட்ட பல்வேறு விளையாட்டுக்களில் ஈடுபட்டார்.
பாலச்சந்திரன் பல ஆண்டுகள் இலங்கை உள்நாட்டு வருமான வரித்திணைகளத்தில் பணி புரிந்தவர்.
1965 இல் நெல்லை க. பேரன் எழுதி, நெல்லியடி ஐக்கிய கலாசாலையில் மேடையேறிய “புரோக்கர் பொன்னம்பலம்” என்ற நகைச்சுவை நாடகத்தில் நடிக்கத் தொடங்கி 1990 இல் கொழும்பில் வெள்ளி விழா கொண்டாடியவர்.
இதிகாசம், சமுக, நவீன, நகைச்சுவை, பாநாடகம் என அனைத்து வகையான மேடை நாடகங்களிலும் நடித்தவர்.
பாலச்சந்திரன் இலங்கையில் அறியப்பட்ட வானொலி நடிகர்களில் ஒருவர். ஏறக்குறைய 20 ஆண்டுகளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையிலும், வர்த்தக சேவையிலும் ஒலிபரப்பான ஏராளமான வானொலி நாடகங்களில் நடித்ததோடு, தணியாத தாகம் என்ற பலரும் அறிந்த வானொலி தொடர் நாடகத்தில் சோமு என்ற பாத்திரத்தில் நடித்தவர்.
இலங்கை ரூபவாகினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாடகங்களான நிஜங்களின் தரிசனம், உதயத்தில் அஸ்தமனம், திருப்பங்கள் போன்றவற்றில் நடித்ததோடு காதம்பரி நிகழ்ச்சியில் பல குறு நாடகங்களை எழுதி நடித்திருக்கிறார்.
இலங்கையில் வாடைக்காற்று, அவள் ஒரு ஜீவநதி, நாடு போற்ற வாழ்க, ஷார்மிளாவின் இதய ராகம், Blendings (ஆங்கிலம்) அஞ்சானா (சிங்களம்) ஆகிய திரைப்படங்களிலும், கனடாவில் உயிரே உயிரே, தமிழிச்சி, கனவுகள், மென்மையான வைரங்கள், சகா, என் கண் முன்னாலே, 1999 ஆகிய திரைப்படங்களிலும் நடித்தவர்.
இலங்கை வானொலியில், ‘கலைக்கோலம்’ சஞ்சிகை நிகழ்ச்சியையும், ‘விவேகச் சக்கரம்’ என்ற பொதுஅறிவுப் போட்டி நிகழ்ச்சியையும் தயாரித்து வழங்கியிருக்கிறார்.
இலங்கை வானொலிக்காக ஏராளமான நகைச்சுவை நாடகங்களையும், தனி நாடகங்களையும், தொடர் நாடகங்களையும் எழுதியவர். தொடர் நாடகங்களில் கிராமத்துக் கனவுகள் இவரது பிறந்த இடமான கரவெட்டியை பின்னணியாக கொண்டிருப்பதும், வாத்தியார் வீட்டில் இவர் வாழ்ந்த இடமான இணுவிலை பின்னணியாகக் கொண்டிருப்பதும் தனிச்சிறப்பாகும்.
இந்த நாடகத்தின் ஒலிப்பதிவைக் கேட்டே கமலஹாசன் தெனாலி படத்தில் சோமன் பாத்திரத்தில் இலங்கைத் தமிழ் பேசி நடித்தார். இப்படத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் போது கமலஹாசனே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
தினகரன், வீரகேசரி முதலான பத்திரிகைகளில் ‘மலர் மணாளன்’ என்ற புனைபெயரில் சிறுகதைகள் எழுதியதோடு, சிரித்திரன் இதழில் பல ‘சிரிகதை’களை எழுதியுள்ளார். தினகரன், ஈழநாடு, முரசொலி போன்ற பத்திரிகைகளில் திரைப்படம், விளையாட்டுத் துறை தொடர்பான பல கட்டுரைகளையும் எழுதினார்.
ஐரோப்பாவில் வெளிவரும் ‘ஒரு பேப்பர்’ என்ற பத்திரிகையில் ‘கடந்தது..நடந்தது’ எனும் நகைச்சுவை கட்டுரைத் தொடரையும், கனடாவில் “தாய் வீடு” பத்திரிகையில் வாழ்வியல் சம்பந்தமான கட்டுரைத் தொடரையும், “தமிழ் ரைம்” சஞ்சிகையில் “என் கலைவாழ்வில்” என்ற அனுபவத்தொடரையும் எழுதியவர்.
தாய்வீடு பத்திரிகையில் , “வாத்தியார் வீட்டிலிருந்து வான்கூவர் வரை” என்ற தொடரையும், “தூறல்” என்ற காலாண்டு சஞ்சிகையில் “என் மனவானில்” என்ற தொடரையும் எழுதி வந்தார்.
இலங்கையில் வாடைக்காற்று, Blendings (ஆங்கிலம்) ஆகிய திரைப்படங்களின் உதவி இயக்குனராகவும் கனடாவில் எங்கோ தொலைவில், மென்மையான வைரங்கள் ஆகிய திரைப்படங்களின் இயக்குனராகவும் செயற்பட்டார்.
வானொலி, மேடை, தொலைக்காட்சி, எழுத்து என இவரது எல்லாப் படைப்புகளின் ஊடாகவும் நகைச்சுவையை வெளிப்படுத்தினார். “தனி நடிப்பு என்ற நகைச்சுவை மேடை நிகழ்வை முதன் முதலாக தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
