செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்குக் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளை அறிமுகப்படுத்த ஆஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பாதுகாப்பு மீறல்கள் மற்றும் இணையவழித் தாக்குதல்கள் தொடர்பான சம்பவங்களை அரசாங்கத்திற்குக் கட்டாயமாக அறிவித்தல், செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் செயல்பாடுகளைச் சுதந்திரமாகக் கண்காணித்தல் உள்ளிட்ட புதிய நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் எனப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
பொது மருத்துவச் செலவினங்கள் தொடர்பான ஆய்வின்போது, OpenAI நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு முகவர் ஒன்று அரசாங்கத்தின் மருத்துவப் புள்ளிவிவர இணையத்தளத்தை உரிய அனுமதியின்றி அணுகிய சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்ட ஆய்வில் முன்வைக்கப்பட்ட அனைத்து முக்கியப் பரிந்துரைகளையும் தனது தொழிலாளர் கட்சி அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக அல்பானீஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் முறையற்ற செயற்பாடுகள், பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் இணையவழிச் சம்பவங்கள் தொடர்பான தகவல்களை உரிய அதிகாரிகளுக்குக் கட்டாயம் அறிவிக்க வேண்டும். அத்துடன், பாரிய முறைகேடுகளைக் கையாள்வதற்காகக் குற்றவியல் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும் அரசாங்கம் பரிசீலிக்கவுள்ளது.
மேலும், செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் உருவாக்கம் மற்றும் செயல்பாட்டின்போது பாதுகாப்புத் தரநிலைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதற்காகத் தனியான செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆணையம், செயற்கை நுண்ணறிவு அமைப்புகளால் ஏற்படக்கூடிய பாரிய அபாயங்களைக் கண்டறிதல், அவற்றின் பாதுகாப்புத் தரத்தை மதிப்பிடுதல் மற்றும் மாதிரிகளின் சுதந்திரமான ஆய்வுகளை மேற்கொள்ளுதல் போன்ற பொறுப்புகளை ஏற்கும்.
விதிமுறைகளை மீறும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கு இந்த ஆணையம் கடுமையான தண்டனைகளை விதிக்க முடியும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அல்பானீஸ், தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அதற்கேற்ப சட்டங்களும் மாற்றமடைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு ஆஸ்திரேலியாவுக்குப் புதிய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வாய்ப்புகளை உருவாக்கினாலும், தொழில்நுட்பம் மனித சமூகத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராமல், மனிதர்களே அதன் வளர்ச்சியையும் பயன்பாட்டையும் வழிநடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், குறித்த பாதுகாப்பு மீறல் தொடர்பாக ஆகஸ்ட் மாதத்திலேயே தங்களுக்குத் தெரியவந்ததாக OpenAI நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தற்செயலாக இடம்பெற்றதாகவும், அதன் விசாரணையில் நோயாளர்களின் தனிப்பட்ட மருத்துவப் பதிவுகள் அணுகப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
மறுபுறம், ChatGPT தயாரிப்பு நிறுவனமான OpenAI மற்றும் அதன் போட்டி நிறுவனமான Anthropic ஆகியவற்றின் செயற்கை நுண்ணறிவு மாதிரிப் பயிற்சிக்காகப் பதிப்புரிமைச் சட்டங்களில் விலக்களிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் மறுத்துள்ளது. அதற்குப் பதிலாக, ஆஸ்திரேலியப் பதிப்புரிமை உரிமையாளர்களுடன் உரிம ஒப்பந்தங்களை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இரு நிறுவனங்களும் தமது செயற்கை நுண்ணறிவு முகவர்களால் ஏற்படக்கூடிய தரவு மீறல்கள் தொடர்பாகக் கட்டாய அறிக்கையிடல் நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
