யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமிழ்-கனடிய நடிகை மைத்ரேயி இராமகிருஷ்ணனின் உலகளாவிய சாதனைகளில் இலங்கையர்கள் பெருமிதம் கொள்ள வேண்டும் என்றும், அவரை நோக்கி நடத்தப்படும் இனவாத சமூக ஊடகத் தாக்குதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அர்ச்சுனா, இனப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் அனைத்து இலங்கையர்களும் அவரது சர்வதேச வெற்றியைக் கொண்டாட வேண்டும் என்று கூறினார்.
நடிகையையும் அவரது படைப்புகளையும் குறித்து சில சிங்கள சமூக ஊடகப் பயனர்கள் தெரிவித்த இழிவான கருத்துக்களை அவர் விமர்சித்தார். மேலும், இதுபோன்ற கருத்துக்களைத் தெரிவிப்பதை நிறுத்திவிட்டு, சர்வதேச அளவில் புகழ்பெற்ற இலங்கை வம்சாவளியினரை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
ராமகிருஷ்ணன் மற்றும் அவரது சமீபத்திய நெட்ஃபிக்ஸ் திரைப்படமான ‘பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்’ தொடர்பாக இணையத்தில் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து அவரது இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
விளம்பர நேர்காணல்களின் போது நடிகை தனது தமிழ் மற்றும் இலங்கை பாரம்பரியத்தைப் பற்றிப் பேசியதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை தீவிரமடைந்தது. இதன் விளைவாக, பல சமூக ஊடகப் பக்கங்கள், அத்திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களையும் தரமதிப்பீடுகளையும் வழங்குமாறும், அத்துடன் இலக்கு வைக்கப்பட்ட இழிவான கருத்துக்களையும் வெளியிடுமாறும் அழைப்பு விடுத்தன.
ஒன்ராறியோவின் மிசிசாகாவில் இலங்கைத் தமிழ் பெற்றோருக்குப் பிறந்து வளர்ந்த மைத்ரேயி ராமகிருஷ்ணன், நெட்ஃபிலிக்ஸ் தொடரான ’நெவர் ஹேவ் ஐ எவர்’ இல் தேவி விஸ்வகுமார் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் முதன்முதலில் சர்வதேச அளவில் புகழ் பெற்றார்.
