காணி விடுவிப்பு தொடர்பிலான கலந்துரையாடல்களை முன்னெடுத்து தீர்வுகள் கிடைக்கும் வரையில் தையிட்டி விகாரை கட்டுமானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் புதிய கட்டுமானங்களை கட்டும் நடவடிக்கை, தடுத்து நிறுத்த வேண்டும் என காணி உரிமையாளர்கள் கோரியுள்ளனர்.
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடைய கூட்டம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயலர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த கூட்டம் தொடர்பில் காணி உரிமையாளர்கள் தெரிவிக்கையில்,
தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பான காணிப் பிணக்குகளைத் தீர்க்கும் பொருட்டு காணி உரிமையாளர்களுடனான கலந்துரையாடலை டிசம்பர் முதலாம் திகதி கொழும்பில் நடாத்த உள்ளதாகவும் , அதில் காணி உரிமையாளர்களைப் பங்குபற்றக் கோரி, அதற்கான ஒழுங்கமைப்பைச் செய்யும் நோக்கில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய ஓய்வுபெற்ற நீதிபதி , தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தினுடைய தலைவர் உட்பட்ட 13 பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவிடம் எமது காணி பிரச்சினைகளைக் கலந்துரையாடி அதற்கான தீர்வுகளை முன்வைக்குமாறும் இந்த கலந்துரையாடலில் கூறப்பட்டது.
இந்தக் காணிப் பிரச்சினை தொடர்பான முடிவுகள் எடுப்பதற்கோ அல்லது காணிப் பிணக்குகள் சம்பந்தமான மேலதிகமான விடயங்களோ இந்த கலந்துரையாடப்படவில்லை.
இதில் நாம் முக்கியமாக முன் வைத்த கோரிக்கை , எமது காணி பிரச்னைக்கு தீர்வு வரும் வரையில் , விகாரையை சுற்றியுள்ள பகுதிகளில் புதிதாக கட்டப்படும் கட்டுமான பணிகளை நிறுத்தவும் , மேலும் புதிதாக எந்தவிதமான கட்டுமான பணிகளையும் முன்னெடுக்காது தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளோம் என தெரிவித்தனர்.
