எமக்கென்று ஒரு பேருந்து நிலையம் இருக்கும் போது , நாம் வேறு எங்கிருந்தும் சேவையை முன்னெடுக்க மாட்டோம் எனவும் , எமது பேருந்து நிலைய காணியை அபகரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் இல்லையெனில் நாடளாவிய ரீதியில் தொழில் சங்க போராட்டத்தை முன்னெடுப்போம் என அகில இலங்கை போக்குவரத்து சபையின் கட்சி சார்பற்ற தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்
டிசம்பர் முதலாம் திகதி முதல் யாழில் இருந்து 100 கிலோ மீற்றருக்கும் அதிகமான தூர சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் யாழ்ப்பாண நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளன.
அந்நிலையில் , தாம் வேறு இடத்தில் இருந்து சேவையை ஆரம்பிக்க மாட்டோம் என இன்றைய ஊடக சந்திப்பில் , அகில இலங்கை போக்குவரத்து சபையின் கட்சி சார்பற்ற தொழிற்சங்கத்தினர் உறுதியாக கூறியுள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில்,
நாம் எமது பேருந்து நிலையத்தில் இருந்தே சேவைகளை தொடர்ந்து முன்னெடுப்போம். நாம் இவ்வாறாக கூறி வரும் நிலையில் எமது பேருந்து நிலைய காணியை மாநகர சபை தமக்கு சொந்தமானது எனவும் எமக்கு குத்தகைக்கு வழங்கிய இந்த காணியை மீள பெற போவதாகவும் கூறி வருகின்றனர்.
அதேநேரம் வடமாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் , யாழ்ப்பாண பிரதேச செயலர் எமது பேருந்து நிலைய காணியை அபகரிக்க நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்ல உள்ளதாக கூறியுள்ளதாக அறிகிறோம்.
எமது பேருந்து நிலைய காணியை அதிகாரிகள் அபகரிக்க முயல கூடாது. அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினால் நாமும் நாடளாவிய ரீதியில் தொழில்சங்க நடவடிக்கைகளில் இறங்குவோம்.
இலங்கை போக்குவரத்து சபை தற்போது பெரும் நஷ்டத்தில் இயங்குகின்றது.நஷ்டம் காரணமாக நாட்டில் சில சாலைகள் (டிப்போ) மூடுவிழா கண்டுள்ளது. நாமும் யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறி வேறு இடத்தில் இருந்து சேவைகளை ஆரம்பித்தால் நஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டும் எமது சாலையும் மூடுவிழா காணும்
அதனால் நாம் எமது பேருந்து நிலையத்தை விடுத்து வேறு எங்கு இருந்தும் சேவையை ஆரம்பிக்க மாட்டோம் என உறுதியாக கூறியுள்ளனர்.
