மயிலத்தமடு – மாதவனையில் மீண்டும் நான்கு பசுக்கள் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை!
கன்றுகள் வயிற்றிலிருந்து உருவி வீசப்பட்ட கொடூரம் – வேதனையின் உச்சத்தில் பண்ணையாளர்கள்!
சட்டத்தின் ஆட்சி எங்கே? பொலிஸாரின் பொறுப்பற்ற செயற்பாடுகளுக்குப் பின்னால் இருப்பது யார்? சர்வதேசம் தலையிட வேண்டும்!
மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பசுக் கொலைகளின் உச்சக்கட்டமாக, நேற்று (18.11.2026) பிற்பகல் சுமார் 4 மணியளவில் நான்கு பசுக்கள் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
தமது பசுக்களைக் காணவில்லை எனத் தேடிச் சென்ற உரிய பண்ணையாளர்கள், அவை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு, அவற்றின் உடற்பாகங்கள் சிதைக்கப்பட்டுக் கிடந்த கோரமான காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட பசுக்களில்,
- சித்தாண்டி 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தேவராசா சிறிதரன் என்பவருக்குச் சொந்தமான ஒரு பசு.
- சித்தாண்டி 4, வேலாயுதம் வீதியைச் சேர்ந்த இளையதம்பி சதீஷ்குமார் என்பவருக்குச் சொந்தமான ஒரு பசு.
- சித்தாண்டி 4, வேலாயுதம் வீதியைச் சேர்ந்த சின்னத்தம்பி செந்தில்குமார் என்பவருக்குச் சொந்தமான ஒரு பசு.
உட்பட நான்கு பசுக்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன.
இதில் மிகவும் கொடூரமான விடயம் என்னவெனில், இரண்டு பசுக்களின் வயிற்றிலிருந்த கன்றுகள் வெளியே உருவி வீசப்பட்டுள்ளதுடன், ஏனைய உடற்பாகங்களில் இருந்து இறைச்சி உரித்தெடுக்கப்பட்ட நிலையில் அவை காணப்பட்டுள்ளன.
இது வெறுமனே கால்நடைகளைக் கொல்லும் சம்பவம் அல்ல. பல தலைமுறைகளாக கால்நடை வளர்ப்பைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள தமிழ் பண்ணையாளர்களின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும் திட்டமிட்டு அழிக்கும் கொடூரமான நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது.
குறிப்பாக, கடந்த மூன்று மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் 25 இற்கும் மேற்பட்ட பசுக்கள் இப்பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரமும் இதே தேவராசா சிறிதரன் என்பவருக்குச் சொந்தமான பசு ஒன்று கொல்லப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அவருக்குச் சொந்தமான பசு கொல்லப்பட்டிருப்பது பண்ணையாளர்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.
முறைப்பாட்டைக்கூட ஏற்க மறுக்கும் பொலிஸார் – சட்டத்தின் ஆட்சி எங்கே?
இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்வதற்காக மயிலத்தமடு பகுதி பொலிஸாரை அணுகிய பண்ணையாளர்களின் முறைப்பாட்டை ஏற்க மறுத்த பொலிஸார், அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள வெலிஓயா பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்யுமாறு கூறி அவர்களைத் திருப்பி அனுப்பியுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பாக முறைப்பாடு செய்யச் செல்லும் மக்களின் முறைப்பாடுகளைக்கூட ஏற்றுக்கொள்ள மறுக்கும் நிலைமை எதற்காக உருவாகியுள்ளது?
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய பொலிஸாரே முறைப்பாடுகளை ஏற்க மறுத்தால், இந்த மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்குவது யார்?
தொடர்ச்சியாகப் பசுக்கள் கொல்லப்படுகின்றன. பண்ணையாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகின்றது. ஆனால், இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான பொலிஸ் நடவடிக்கைகள் எதுவும் கண்களுக்குத் தென்படவில்லை.
பொலிஸாரின் இத்தகைய பொறுப்பற்ற செயற்பாடுகள் குற்றவாளிகளுக்குத் துணிச்சலை ஏற்படுத்துகின்றன என்ற நியாயமான சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்தத் தொடர்ச்சியான சம்பவங்களுக்குப் பின்னால் யார் இருக்கின்றார்கள்? குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? பொலிஸாரின் செயற்பாடுகளில் காணப்படும் இந்தத் தாமதத்திற்கும் தடைகளுக்கும் பின்னால் ஏதேனும் அழுத்தங்கள் உள்ளனவா?
இவை அனைத்துக்கும் உரிய விசாரணைகள் மூலம் பதிலளிக்கப்பட வேண்டும்.
தமிழர்களின் பொருளாதார இருப்பை அழிக்கும் திட்டமிட்ட நடவடிக்கையா?
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் என்பது வெறுமனே கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் பயிர்ச்செய்கையாளர்களுக்கும் இடையிலான முரண்பாடு அல்ல.
இது வடக்கு – கிழக்கில் தமிழர்களின் பாரம்பரிய நில உரிமை, பொருளாதார இருப்பு, வாழ்வாதார உரிமை மற்றும் எதிர்கால இருப்பு ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்துள்ள ஒரு முக்கியமான பிரச்சினையாகும்.
நில ஆக்கிரமிப்புகள், மேய்ச்சல் தரைகளைப் பயன்படுத்துவதற்கான தடைகள், கால்நடைகள் மீதான தாக்குதல்கள், தொடர்ச்சியான பசுக் கொலைகள் எனப் பல்வேறு வழிகளில் பண்ணையாளர்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு வருகின்றனர்.
தமிழ் மக்களின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் கால்நடை வளர்ப்ப பொருளாதாரத்தினை அழிப்பதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாரம்பரிய இருப்பையும் இல்லாமல் செய்துவிடலாம் என ஆட்சியாளர்கள் கருதுகின்றார்களா என்ற கேள்வி எழுகின்றது.
சர்வதேசம் தலையிட வேண்டும்!
இலங்கையின் உள்ளகச் சட்ட அமுலாக்கப் பொறிமுறைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பையும் நீதியையும் வழங்கத் தவறியுள்ள நிலையில், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாகச் சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
எனவே,
- மயிலத்தமடு – மாதவனைப் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்குள் கொல்லப்பட்ட 25 இற்கும் மேற்பட்ட பசுக்கள் தொடர்பாக உடனடியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
- 18.11.2026 அன்று நான்கு பசுக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
- பண்ணையாளர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளைச் செய்வதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். முறைப்பாடுகளை ஏற்க மறுத்தமை தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
- மயிலத்தமடு – மாதவனைப் பண்ணையாளர்களுக்கும் அவர்களின் கால்நடைகளுக்கும் நிரந்தரமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
- பண்ணையாளர்களின் வாழ்வாதார இழப்புகளுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.
- இத்தொடர் சம்பவங்களின் பின்னணியில் உள்ள சக்திகள் தொடர்பாகச் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
உள்ளகப் பொறிமுறைகளின் ஊடாகக்கூட அடிப்படைச் சட்டப் பாதுகாப்பையும் நீதியையும் பெற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ள நிலையில், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் சர்வதேச சமூகமும் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களின் பாதுகாப்பையும் நீதியையும் உறுதிப்படுத்த வேண்டும் எனக் கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றது.
தமிழர்களின் நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் அழிப்பதன் மூலம் அவர்களின் இருப்பை இல்லாமல் செய்துவிட முடியாது. பசுக்களைக் கொல்வது அவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பது ஒரு இனத்தின் பொருளாதார இருப்பையே அழிப்பதாகும்.
நீதி மறுக்கப்படும் இடத்தில் சர்வதேசத்தின் தலையீடு அவசியம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை எமது குரல் ஓயாது!
ச. சிவயோகநாதன்
தலைவர்,
கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம்.
