முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் புலனாய்வு துறை பணிப்பாளர் சுரேஸ் சாலே இருவரும் தண்டிக்கப்பட்டால் மட்டுமே ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலிற்கு நீதி கிடைத்ததாக கருத முடியுமென இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
இந்நிலையில் கோத்தபாயவுக்கு வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதன் மூலம், அவரும் ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்திற்குரிய நபராக மாறியுள்ளதாக தேசிய கத்தோலிக்க சமூகத் தொடர்பாடல் மையம் தெரிவித்துள்ளது.
எனவே, அந்தச் சந்தேகத்தைப் போக்குவதற்காகவோ அல்லது கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து விசாரணை நடத்தி தண்டனை வழங்குவதற்காகவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“இந்த குண்டுத் தாக்குதல் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்துச் சென்றதும், இந்த இரண்டு அம்சங்களையும் ஒன்றிணைத்ததுமான ஒரு குழு இருக்கிறது.
இப்போது அந்தக் குழுவை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே எங்களுடைய கருத்தாகும். குறிப்பாக, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டவர்கள், தற்போது சுரேஸ் சலே அவர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சந்தேகநபராக வைத்துள்ளனர் எனவும் மையம் தெரிவித்துள்ளது.
