ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் அரசியல் மேடைகளில் ஆண்களின் குரல்களே அதிகமாக கேட்கப்பட்டன.
ஆனால் அந்த காலத்திலேயே, அரசியல் கூட்டங்களின் மேடையில் முதலில் தமிழ் பற்று பாடல்களை பாடிய குரல், பின்னர் அரசியல் உரைகளையும் முழங்க தொடங்கியது.
அந்த குரலுக்கு சொந்தக்காரர் — மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம்.
இசையை கற்ற மாணவியாக தொடங்கி, இலங்கை தமிழர்களின் அரசியல் போராட்டங்களின் பல முக்கிய தருணங்களை நேரில் சந்தித்த பெண்ணாக அவர் உருவெடுத்த கதை, அக்காலத்து அரசியல் வரலாற்றில் தனி அத்தியாயம்.
இசையில் இருந்து தொடங்கிய பயணம்
மங்கையர்க்கரசி 1933ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை அருகிலுள்ள மூளாயில் பிறந்தார்.
12 வயதில் மருதனார்மடத்தில் இருந்த Ramanathan Collegeஇல் சேர்ந்து இசை பயின்றார். Sir Ponnambalam Ramanathan நிறுவிய இந்த கல்வி நிலையத்தில் அவருக்கு கர்நாடக இசை மற்றும் இந்திய நாடக கலைகளில் ஆர்வம் வளர்ந்தது.
பின்னர் அந்த இசை அவரது வாழ்க்கையின் இன்னொரு தளத்துடன் இணைந்தது.
அவர் பாடிய பாடல்கள் Federal Party அரசியல் கூட்டங்களில் ஒலிக்க தொடங்கின.
அந்த மேடைகளில் பாடிய பெண், நாளடைவில் அதே அரசியல் சூழலில் உரையாற்ற தொடங்கினார்.
1954 ஆம் ஆண்டு …. வளர்ந்து வந்த தமிழ் அரசியல் தலைவரான Appapillai Amirthalingamஐ அவர் திருமணம் செய்தார்.
அப்போது அமிர்தலிங்கம் Federal Partyஉடன் இணைந்து அரசியலில் தீவிரமாக இயங்கி கொண்டிருந்தார்.
ஆரம்பத்தில் இந்த திருமணத்துக்கு மங்கையர்க்கரசியின் தந்தை விருப்பம் காட்டவில்லை. காரணம் — “அரசியல்வாதி வேண்டாம்” என்பதே.
ஆனால் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் அந்த திருமணம் ஒரு குடும்ப வாழ்க்கையை தாண்டி, இலங்கையின் கொந்தளிப்பான அரசியல் வரலாற்றுடன் இணைந்த நீண்ட பயணமாக மாறியது.
குழந்தையையும் பார்த்து கொண்டு போராட்டத்திலும்
1950களில் மொழி தொடர்பான அரசியல் மோதல்கள் தீவிரமடைந்தபோது, Federal Party நடத்திய எதிர்ப்பு போராட்டங்களிலும் மங்கையர்க்கரசி கலந்து கொண்டார்.
1958ஆம் ஆண்டின் ‘Sri’ எதிர்ப்பு இயக்கம் அவரது அரசியல் செயல்பாட்டில் முக்கியமான தருணமாக அமைந்தது.
வாகன இலக்க தகடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட சிங்கள ‘Sri’ எழுத்துக்கு எதிராக Federal Party நடத்திய பிரசாரத்தில் அவர் பங்கேற்றார்.
அந்த போராட்டத்தின் போது அவரது குழந்தை ஆறு முதல் எட்டு மாதங்களே வயதுடையதாக இருந்ததாக அவர் கூறி இருக்கிறார்.
குழந்தையை காரில் வைத்து கொண்டு, அவ்வப்போது உணவு கொடுத்து, மீண்டும் தெருவில் போராட்டத்தில் கலந்து கொண்டதாக அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
ஒரு பக்கம் தாய்மை.
மறுபக்கம் அரசியல் போராட்டம்.
இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் சுமந்த அனுபவமே மங்கையர்க்கரசியின் அரசியல் வாழ்க்கையின் தனித்துவமான பக்கங்களில் ஒன்றாக மாறியது.
1961 — குரல் இன்னும் உயர்ந்த காலம்
1961ஆம் ஆண்டின் தமிழ் மக்களின் சத்தியாக்கிரக போராட்டத்திலும் அவர் முக்கியமாக செயல்பட்டார்.
அந்த காலத்தில் பெண்களின் பங்கேற்பும் அதிகரித்த நிலையில், மங்கையர்க்கரசி பெண்கள் முன்னணியுடன் இணைந்து செயல்பட்டார். போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண்களில் அவர் முக்கியமானவராக பதிவாகியுள்ளார்.
அவரது பெரிய அரசியல் உரைகளில் ஒன்றும் இந்த காலகட்டத்திலேயே இடம்பெற்றது.
போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவிகளை பாராட்டி அவர் உரையாற்றியதாக பின்னர் பதிவுகள் குறிப்பிடுகின்றன.
அதன் பிறகு அவர் வெறும் அரசியல் தலைவரின் துணைவியாக அல்லாமல், அவருக்கென ஒரு அரசியல் குரலை உருவாக்கி கொண்டார்.
மேடையில் பாடியவர், பின்னர் மேடையில் பேசியவர்
மங்கையர்க்கரசியின் வாழ்க்கையில் இசையும் அரசியலும் நீண்ட காலம் ஒன்றோடொன்று பயணித்தன.
ஒரு காலத்தில் அவரது பாடலுடன் Federal Party கூட்டங்கள் தொடங்கியதாக பதிவுகள் கூறுகின்றன.
பின்னர் அதே மேடைகளில் அவரது அரசியல் உரைகளும் இடம்பெற்றன.
இதனால் அவரை நினைவு கூரும்போது, “அமிர்தலிங்கத்தின் மனைவி” என்ற அடையாளம் மட்டும் போதாது.
அவருக்கென அரசியல் செயற்பாட்டையும், மேடை பேச்சு திறனையும் உருவாக்கியிருந்தார்.
இந்திய தலைவர்களுடனான தொடர்பு
1977ஆம் ஆண்டுக்கு பின்னர் அவரது கணவர் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர் கட்சி தலைவராக உயர்ந்தபோது, மங்கையர்க்கரசியின் பொது வாழ்க்கையும் மேலும் விரிந்தது.
இந்திய அரசியல் தலைவர்களான Indira Gandhi மற்றும் Rajiv Gandhi ஆகியோருடனும் அவருக்கு தொடர்புகள் உருவானதாக அவரது வாழ்க்கை வரலாற்று பதிவுகள் குறிப்பிடுகின்றன.
இவ்வாறு ஒரு யாழ்ப்பாண பெண்ணாக தொடங்கிய அவரது வாழ்க்கை, இலங்கையை தாண்டி இந்திய அரசியல் வட்டாரங்களுடனான தொடர்புகளையும் பெற்றது.
அரசியல் வன்முறை குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை
1970களின் இறுதியிலும் 1980களின் தொடக்கத்திலும் இலங்கையின் அரசியல் சூழல் வேகமாக மாறியது.
அவரது இரு மகன்களும் பாதுகாப்புக்காக லண்டனுக்கு சென்றனர்.
ஆனால் மங்கையர்க்கரசியும் அமிர்தலிங்கமும் இலங்கையிலேயே தங்கி, அரசியல் தீர்வை தேடும் முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டனர்.
1983இற்கு பின்னர் நிலைமை மேலும் மோசமடைந்தது.
இறுதியில் 1989 ஜூலையில் அமிர்தலிங்கம் கொல்லப்பட்டபோது, அவரது வாழ்க்கையின் மிக பெரிய தனிப்பட்ட துயரங்களில் ஒன்று நிகழ்ந்தது.
அமிர்தலிங்கம் 13 July 1989 அன்று படு கொ லை செய்யப்பட்டதாக பதிவுகள் குறிப்பிடுகின்றன.
அதன் பின்னர் மங்கையர்க்கரசி இலங்கையை விட்டு லண்டனுக்கு சென்றார்.
லண்டனிலும் சமூக வாழ்க்கையை தொடர்ந்தார்
லண்டனில் இளைய மகனுடன் வாழ்ந்த அவர், பின்னர் அங்குள்ள தமிழ் சமூக நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டார்.
Kingston பகுதியில் உள்ள தமிழ் சமூகத்துடன் இணைந்து, முதியோர் நிகழ்ச்சிகள், கலை நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு சமூக செயல்பாடுகளில் பங்கேற்றார்.
இசையில் இருந்து அரசியலுக்கும், அரசியலில் இருந்து புலம்பெயர் சமூக வாழ்க்கைக்கும் நீண்ட அவரது பயணம் இங்கேயும் நின்று விடவில்லை.
2016 மார்ச் 9ஆம் திகதி லண்டனில் 82 ஆவது வயதில் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் காலமானார்.
ஒரு தலைமுறையின் பெண் குரல்
மங்கையர்க்கரசி அமிர்தலிங்கத்தின் வாழ்க்கையை பின்னோக்கி பார்க்கும்போது, அது ஒரு அரசியல் தலைவரின் குடும்ப கதையாக மட்டும் தெரியவில்லை.
இசை கற்ற ஒரு இளம் பெண், அரசியல் கூட்டங்களின் பாடகியாக மாறினார்.
பின்னர் போராட்டங்களில் பங்கேற்றார்.
கைது செய்யப்பட்டார்.
பெண்களிடம் உரையாற்றினார்.
அரசியல் மேடைகளில் சொந்த குரலை உருவாக்கினார்.
பின்னர் புலம்பெயர் வாழ்விலும் சமூகப் பணியை தொடர்ந்தார்.
இலங்கையின் தமிழ் அரசியல் வரலாற்றில் பெண் அரசியல் செயற்பாட்டாளர்களில் ஒருவராக மங்கையர்க்கரசியின் வாழ்க்கை இன்று மீண்டும் நினைவு கூரப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.
ஒரு காலத்தில் அரசியல் கூட்டத்தை தொடங்கிய அவரது குரல், பின்னர் ஒரு தலைமுறையின் அரசியல் நினைவுகளின் ஓர் அங்கமாகவே மாறியது.
