காங்கோ ஜனநாயகக் குடியரசில் இராணுவ உத்தரவுகளை மீறியமை, போர்க்களத்தில் இருந்து தப்பிச் சென்றமை மற்றும் கலகத்தில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் 66 இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோமா இராணுவ நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
உகாண்டா, ருவாண்டா மற்றும் புருண்டி ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதிகளுக்கு அருகில், அரச படைகளுக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த மோதல்களின்போது தமது கடமைகளைச் செய்யாமல் தப்பிச் சென்றதாகக் கூறி, காங்கோ இராணுவத்தைச் சேர்ந்த குறைந்தது 71 வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 70 பேருக்கு மரண தண்டனையும், உளவுத்துறை அதிகாரி ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்குமாறு அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் கோரியிருந்தது. எனினும், நான்கு பேர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
வடக்கு கிவு மற்றும் தெற்கு கிவு பகுதிகளில் இராணுவ ஒழுக்கத்தைப் பாதுகாப்பதற்காக இத்தகைய நடவடிக்கைகள் அவசியம் என அப்பகுதி இராணுவத்தின் தகவல் தொடர்புப் பிரிவுத் தலைவர் மேஜர் டியூடோன் கசெரேகா தெரிவித்துள்ளார்.
காங்கோவில் அரச படைகளுக்கும் M23 உள்ளிட்ட கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தக் கிளர்ச்சிக் குழுக்கள் AFC என்ற அமைப்பின் கீழ் ஒன்றிணைந்து செயற்படுகின்றன.
இந்த மோதல்களில் ருவாண்டாவின் தொடர்பு இருப்பதாக காங்கோ அரசாங்கமும் சர்வதேச சமூகத்தின் பல தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். எனினும், ருவாண்டா ஜனாதிபதி பால் ககாமே இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
2025ஆம் ஆண்டு அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் காங்கோ மற்றும் ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும், அந்த ஒப்பந்தம் நீண்டகால மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதில் போதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை என்ற விமர்சனங்கள் உள்ளன.
இதற்கிடையில், கிளர்ச்சிக் குழுக்கள் மற்றும் ருவாண்டா படைகள் மீது கொலை, சித்திரவதை, கட்டாய ஆட்சேர்ப்பு மற்றும் சிறுவர்களைப் படையில் இணைத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ஐக்கிய நாடுகள் சபை முன்வைத்துள்ளது.
காங்கோவின் கிழக்குப் பகுதிகளில் தொடரும் இந்த மோதல்கள், அப்பகுதி மக்களின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.
