பால்டிக் கடலில் ரஷ்யாவுக்குச் சொந்தமான ஸ்பார்டா II சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ, அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இரவு முழுவதும் தொடர்ந்து எரிந்ததாக பின்லாந்து கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என உக்ரைன் மீது சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பின்னர் சேதமடைந்த கப்பல் கடல் நீரோட்டத்தால் பின்லாந்தின் கடல் எல்லைக்குள் அடித்துச் செல்லப்பட்டு, அங்கு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்த 16 பணியாளர்களும் பாதுகாப்பாக அருகிலிருந்த மற்றொரு ரஷ்யக் கப்பலுக்கு வெளியேற்றப்பட்டதாக பின்லாந்து இராணுவம் தெரிவித்துள்ளது.
கடலோரக் காவல்படை வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில், பல கப்பல்கள் நீர்த்தாரைப் பீரங்கிகள் மூலம் ஸ்பார்டா II கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கவும், அதன் தளத்தில் அடுக்கப்பட்டிருந்த சரக்குக் கொள்கலன்களைக் குளிர்விக்கவும் முயற்சிப்பது பதிவாகியுள்ளது.
ரஷ்யாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள லெனின்கிராட் பிராந்தியத்தை இலக்காகக் கொண்டு உக்ரைன் இந்த ஆண்டு தொடர்ச்சியாக ஆளில்லா விமானத் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. இத்தாக்குதல்களில் சில அண்டை நாடுகளான பால்டிக் நாடுகளின் வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், இதனால் ரஷ்யா–உக்ரைன் போர் நேட்டோ நாடுகளின் எல்லைக்குள் விரிவடையும் அபாயம் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவின் கலினின்கிராட் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த ஸ்பார்டா II கப்பல், ரஷ்யாவின் கோக்லாண்ட் தீவுக்கு மேற்கே சர்வதேச கடல் பகுதியில் சேதமடைந்ததாக பின்லாந்து பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. இது ரஷ்ய அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களுடனும் ஒத்துப்போகிறது.
இதற்கிடையில், பின்லாந்து வளைகுடாவில் மேலும் தாக்குதல்கள் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது என எஸ்டோனிய கடற்படைத் தளபதி இவோ வர்க், ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டின் பொது ஒளிபரப்பு நிறுவனமான ERR-க்கு தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இதே பகுதியில் உக்ரைனின் ஆளில்லா விமானத் தாக்குதல்களின்போது ரஷ்யப் போர்க்கப்பல் ஒன்றும் இலக்காகியிருக்கலாம் என பின்லாந்து இராணுவம் தெரிவித்திருந்தது.
121 மீட்டர் நீளமுடைய ஸ்பார்டா II கப்பல் ரஷ்யக் கொடியுடன் பயணித்து வந்தது. ரஷ்ய கப்பல் நிறுவனமான ஒபோரோன்லாஜிஸ்டிகாவுக்குச் சொந்தமான இக்கப்பல், வெள்ளிக்கிழமை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு கலினின்கிராட் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
அமெரிக்க கருவூலத் துறையின் தடைகளுக்கு உட்பட்ட கப்பலாக ஸ்பார்டா II அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒபோரோன்லாஜிஸ்டிகா நிறுவனம் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்திற்குத் தளவாடச் சேவைகளை வழங்கி வருவதாக அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
