யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை ஆசிய நாட்டு நடுத்தர விமானங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் விஸ்தரித்தல் தொடர்பில் வடமாகாண ஆளூநர் கலந்துரையாடப்பட்ட நிலையில் , அது தொடர்பில் மத்திய அரசாங்கத்துடன் உயர்மட்டக் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்குமான மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
Travel Guides & Travelogues
அதன் போதே விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது, குறித்த கலந்துரையாடலில்,
மாணவர் பற்றாக்குறையால் மூடப்படும் பாடசாலைகளை, அரசிற்கு கையளித்த குறித்த அமைப்புகளிடமே மீண்டும் கையளித்தல் மற்றும் ஒவ்வொரு வலயத்திலும் மூடப்படும் ஒரு பாடசாலையை நவீன ஆய்வுகூட வசதிகளுடன் மேம்படுத்துதல் குறித்துப் பரிசீலிக்கப்பட்டது.
மேலும், பின்தங்கிய கிராமப்புற பாடசாலை மாணவர்களின் நலன் கருதி, பிரபல்யமான பாடசாலைகளுடன் ‘சூம்’ தொழில்நுட்பத்தினூடாக நேரடி இணைப்பை ஏற்படுத்திக் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அத்துடன் சாவகச்சேரி, ஊர்காவற்றுறை உள்ளிட்ட பிராந்திய மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதுடன், அங்கு நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல். அத்துடன், யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனையைச் சூழவுள்ள நகரப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, வீதியோரங்களில் தரித்து நிற்கும் வெளிமாவட்ட அரச மற்றும் தனியார் பேருந்துகளை வீரசிங்க மண்டபத்துக்கு அருகிலுள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றுவதற்கான உடனடி நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
பலாலி விமான நிலையத்தை ஆசிய நாட்டு நடுத்தர விமானங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் விஸ்தரித்தல். கீரிமலை, காங்கேசன்துறை, பலாலி வீதிகளில் (764, 769 வழித்தடங்கள்) முன்னைய பாதைகளிலேயே பேருந்து சேவைகளை அனுமதிக்கக் கோருதல் மற்றும் தம்பாலை – இடைக்காடு – வளலாய் வீதியைப் பலாலி வீதியுடன் இணைப்பதற்கான எஞ்சிய 500 மீற்றர் பகுதியை விரைவாக விடுவித்தல் தொடர்பில் பேசப்பட்டது.
மேலும், தீவுப்பகுதி மற்றும் குறிகட்டுவான் இறங்குதுறைக்கான போக்குவரத்து மேம்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
யாழ். நகரம் உட்பட வட மாகாணத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தரக் குளங்களை நன்னீர் தேங்கி நிற்கும் வகையில் புனரமைப்பதுடன், வடிகாலமைப்புகளைச் சீரமைத்தல் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கேட்டறிந்த ஆளுநர் நா.வேதநாயகன்,
சுட்டிக்காட்டப்பட்டுள்ள பல விடயங்கள் கொள்கை ரீதியான முடிவுகளைக் கொண்டிருப்பதால், அவை தொடர்பில் மத்திய அரசாங்கத்துடன் உயர்மட்டக் கலந்துரையாடல்களை நடத்த வேண்டியுள்ளது.
அதேவேளை, மாகாண நிர்வாகத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பில், சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்களுடனான விசேட கலந்துரையாடல்களை மிக விரைவாக ஏற்பாடு செய்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்’ என உறுதியளித்தார்.
